ஊரடங்கு குறித்த புதிய அறிவிப்பினை வெளியிட்டது ஜனாதிபதி ஊடகப்பிரிவு!
கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் நிலையில், மக்களின் வாழ்க்கையை இயல்பு நிலைக்கு கொண்டுவருவதற்கும், நிறுவனங்களின் செயற்பாடுகளை ஆரம்பிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் ஊடகப்பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய எதிர்வரும் மே 11 ஆம் திகதி முதல் குறித்த மாவட்டங்களில் நிறுவனங்களின் செயற்பாடுகளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
அத்தியாவசிய சேவைகளை தொடர்ந்தும் முன்னெடுக்கும் வகையில், நிறுவனங்களை ஆரம்பிப்பதற்கு வேண்டிய ஆலோசனைகள், நிறுவன உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் இதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும், இவ்வாறு திறக்கப்பட்டும் நிறுவனங்களில் சுகாதார நடவடிக்கைகளை முறையாக பின்பற்றுமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இதேபோன்று தனியார் நிறுவனங்கள் காலை 10 மணிக்கு திறக்கப்படவேண்டுமெனவும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று ஏற்படுவதை தடுக்கும் வகையில் மக்கள் அநாவசியமாக வெளியில் நடமாடுவதை தடுப்பதோடு, கூட்டங்கள் மற்றும் பேரணிகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நாடளாவிய ரீதியில் எதிர்வரும் 6ஆம் திகதி இரவு 8 மணி தொடக்கம் 11ஆம் திகதி காலை 5 மணி வரை ஊரடங்கு அமுல்படுத்தப்படும் எனவும் ஜனாதிபதி ஊடகப்பிரிவு இதன்போது சுட்டிக்காட்டியுள்ளது.
அதேநேரம், கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம் ஆகிய மாவட்டங்களில் எதிர்வரும் 4ஆம் திகதி ஊரடங்கு தளர்த்தப்படாது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கருத்துக்களேதுமில்லை