ஊடகப் போராளி சிவராம் கொலைக்கு நீதி கிடைக்கும் வரை நாம் தொடர்ந்து போராட வேண்டும்!

ஊடகப் போராளி மாமனிதர் தராக்கி சிவராமின் 15 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இப்போதுள்ள நெருக்கடிக்கு மத்தியிலும், தமிழ் ஊடகவியலாளர் சங்கங்களின் ஏற்பாட்டில் அனுட்டிக்கப்பட்டுள்ளது.மாமனிதர் சிவராமின் 15ஆவது ஆண்டு …

தர்மரத்தினம் சிவராம் ஏப்ரில் 28, 2005 அன்று இனம் தெரியாதவர்களால் பம்பலப்பிட்டி காவல் நிலையத்துக்கு முன்னால் வைத்து இரவு 10.30 மணியளவில் வானில் கடத்தப்பட்டார். அடுத்த நாள் அவரது உடல் சிறி ஜெயவர்த்தனபுர நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து 500 மீட்டர் தொலைவில்பொலீசாரால் மீட்கப்பட்டது. அவரது உடலைக் குடும்ப உறுப்பினர்களும் அவரது நண்பர்களும் அடையாளம் காட்டினார்கள்.

நினைவேந்தல் நிகழ்வுகளில் ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டு சிவராமின் படத்திற்கு மாலை அணிவித்தும் மெழுகுவர்த்தி ஏற்றியும் மலர்தூவியும் அஞ்சலி செலுத்தினர். தராக்கி சிவராம் கொலை செய்யப்பட்டு 15 ஆண்டுகள் கடந்த நிலையிலும் அவரது கொலைக் குற்றவாளிகள் தண்டிக்கப்படவில்லை எனவும், படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கிடைக்கும் வகையில் நீதியான விசாரணையை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை முன்வைக் கப்பட்டது.

சிவராமின் பிள்ளைகள் வைஷ்ணவி, வைதேகி மற்றும் சேரலாதன் தங்களது அப்பா சிவராமின் நினைவாக ஒரு இரங்கல் செய்தியை எழுதி வெளியிட்டுள்ளார்கள். ” தர்மரத்தினம் சிவராம் தான் மிகவும் விரும்பிய பணியை செய்து கொண்டிருக்கும் போது (தமிழ்மக்களின் சுயாட்சி) இறந்து போனார்” (Dharmaretnam Sivaram: ‘Appa died doing what he loved most’).

இந்த ஆண்டு எங்கள் தந்தை இறந்த 15 ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கிறது. இன்றுவரை, அவரது கொலைக்கு யாரும் தண்டிக்கப்படவில்லை. இதைக் கண்டு நாங்கள் ஆச்சரியப்படவில்லை. எங்கள் குடும்பமும் நீதியை எதிர்பார்க்கவில்லை. இலங்கை அரசின் பரப்புரைக்கு எதிராக எழுதும் ஊடகவியலாளர்களைக் அரசு குறிவைத்து வந்திருக்கிறது. அது இப்போதும் தொடருகிறது. இலங்கையில் காணாமல் போன, தாக்கப்பட்ட அல்லது கொலை செய்யப்பட்ட பல ஊடகவியலாளர்களுக்குப் பொறுப்புக் கூறல் இல்லாமை தொடர்கிறது. எங்கள் அப்பாவின் உடல் இலங்கை நாடாளுமன்றத்திற்கு அருகிலேயே வீசப்பட்டது என்பது நாட்டில் ஊடக சுதந்திரத்தின் (அவல) நிலையைக் காட்டுகிறது. மேலும் அரசின் கொள்கையோடு உடன்படாத ஒருவரது வாயை அடைப்பதற்கு அரசு எந்த அளவிற்குச் செல்லும் என்பதையும் எடுத்துக் காட்டுகிறது.

உள்நாட்டுப் போரின்போதும் அதற்குப் பின்னரும் காணாமல் போன தங்கள் அன்புக்குரியவர்களைப் பற்றித் தொடர்ந்து பதில்களைத் தேடும் பலரைப் போலல்லாமல் அதிட்டவசமாக எங்கள் தந்தையின் உடலை மீட்டெடுக்கவும் இறுதிச் சடங்குகள் செய்யவும் எங்களால் முடிந்தது.

இலங்கையில் வாழும் தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தைப் பற்றி விவாதிக்காமல் எங்கள் தந்தையைப் பற்றிப் பேசுவது கடினம் ஆகும். அது சாத்தியமற்றது என்றும் நாங்கள் உணர்கிறோம். பெரதெனியா பல்கலைக்கழகத்தில் படிக்கும் ஒரு இளைஞனாக இருந்த எங்கள் தந்தை இலங்கையில் உள்ள தமிழ் மக்களுக்கு எதிரான படுகொலைகளால் மனம் பாதிக்கப்பட்டார். இதன் விளைவாக, அவர் தனது கல்வியை நிறுத்த முடிவுசெய்து, இலங்கை அரசால் கட்டமைப்பு ரீதியாக ஒடுக்கப்படும் தமிழ் மக்களின் விடுதலைக்காகப் போராடுவதில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். தொடர்ந்து தேச விடுதலைக்காக அவர் தனது வாழ்க்கையையும் தனது எழுத்தாற்றலையும் அர்ப்பணித்தார்.

தமிழ் மக்களின் விடுதலைக்கான ஆயுதப் போராட்டம் முள்ளிவாய்க்கால் படுகொலையில் முடிவடைந்த விதத்தைக் காண அவர் உயிரோடு இருந்திருந்தால் அவரது மனம் எவ்வளவு தூரம் உடைந்து போயிருக்கும் என்பதை அவரது குழந்தைகளாகிய நாம் அடிக்கடி நினைத்துக் கொள்கிறோம். இலங்கை அரசால் ஆயிரக்கணக்கான தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட கொடூரமான அட்டூழியங்கள் அவரை நிலைகுலையச் செய்திருக்கும்.மாமனிதர் தர்மரட்ணம் சிவராம் …

அதனால்த்தான், எங்கள் தந்தைக்கு மரியாதை செலுத்துவது மட்டுமல்லாமல், போரின் போது உயிர் இழந்த அனைவரையும், குறிப்பாக முள்ளிவாய்க்காலில் நடந்த இறுதிப் போரில் படுகொலை செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான தமிழ் மக்களையும் நினைவுகூர வேண்டிய அவசியத்தை நாங்கள் உணர்கிறோம். இந்த நேரத்தில் எங்கள் தந்தைக்கு நீதி என்பது முள்ளிவாய்க்கால் படுகொலையின் போது இழைக்கப்பட்ட போர்க்குற்றங்களுக்கு இலங்கை அரசு பொறுப்பேற்க வேண்டும். ஆயுத மோதலின் இறுதிக் கட்டத்தில் இராணுவத்திடம் சரணடைந்த தமிழ் குடும்பங்களுக்கு நீதி மற்றும் பொறுப்புக்கூறல் தேவை. இடம் பெயர்ந்து தொடர்ந்து வாழும் குடும்பங்களுக்கும் மற்றும் வடக்கு – கிழக்கு மாகாணங்களில் அரசு ஒடுக்குமுறையின் கீழ் வாழும் அனைவருக்கும் நீதி தேவை.

எங்களைப் பாதுகாத்து, எங்களுக்கு உறைவிடம் நல்கி, சுதந்திரமான வாழ்வை வழங்கிய மிகவும் அன்பான தந்தையான அப்பாவை அவரது குழந்தைகள் ஆகிய நாங்கள் நினைவில் கொள்கிறோம். அவர் அறிந்த பொருளாதார ரீதியாக சிரமப்படும் மாணவர்களுக்கு நிதி உதவிகளையும் வழங்கினார். இருப்பினும், அவரது குடும்பத்தை விடவும் தேவைப்படுபவர்களை ஆதரிப்பதை விடவும் தனது எழுத்தின் மூலம் தனது மக்களின் இறையாண்மையைக் காப்பது அவரது மிக உயர்ந்த குறிக்கோளாக இருந்தது. பல மரண அச்சுறுத்தல்களை எதிர்கொண்ட பின்னரும் அவர் வெளிநாடு செல்ல மறுத்து, தனது பணி இலங்கையில் இருப்பதாக வாதிட்டார்.

திரும்பிப் பார்க்கும்போது, அப்பா மிகவும் நேசித்ததைச் செய்யும் தனது பணியில் இறந்துவிட்டார் என்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். என்றோ ஒரு நாள், தமிழ் மக்களின் சுயாட்சிக்கான அவரது போராட்டம் நனவாகும் என நாம் நம்புகிறோம்.

பதினைந்து ஆண்டுகள் கழிந்தும் மாமனிதர் சிவராம் குடும்பத்துக்கு இன்னும் நீதி வழங்கப்படவில்லை என்பது எல்லோரது மனதிலும் வடுவாக இருக்கிறது. சண்டே லீடர் பிரதம ஆசிரியர் லசந்தா விக்கிரமதுங்க, ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட இருவரது படுகொலைகள் பற்றி சாட்டுக்கேனும் மீள் விசாரணை செய்த நல்லாட்சி அரசு சிவராம், நிமலராசன், நடேசன் போன்றவர்களது படுகொலைபற்றிக் கண்டுகொள்ளாமல் இருந்து விட்டது.

முன்னாள் சனாதிபதி சந்திரிகா குமாரதுங்க பண்டாரநாயக்க காலத்தில்தான் சிவராம் கொலை செய்யப்பட்டார். பின்னர் 2005 ஆம் ஆண்டு பதவிக்கு வந்த மகிந்த இராபச்ச ஆட்சியில் 30 க்கும் அதிகமான ஊடகவியலாளர்கள் இராணுவ புலனாய்வுத்துறை, ஒட்டுக் குழுக்கள் போன்றவற்றால் கொல்லப்பட்டார்கள். ஆனால் சிவராம் கொலை வித்தியாசமானது.

சிவராம் அவர்கள் கொலை செய்யப்பட்டது தொடர்பாக ஆறுமுகம் சிறிஸ்கந்தராசா அல்லது பீட்டர் என்பவரும் இன்னொருவரும் 2005 யூன் மாதம் கைது செய்யப்பட்டனர். பீட்டர், புளட் அமைப்பின் தலைவர் சித்தார்த்தன் தர்மலிங்கம் அவர்களின் தனிச் செயலாளராக இருந்தவர். சிவராம் கடத்தப் பயன்படுத்தப்பட்ட சாம்பல் நிற ரோயற்ரா வாகனம் சித்தார்த்தனுக்குச் சொந்தமானது. கைது செய்யப்பட்ட பீட்டர் பின்னர் விடுதலை செய்யப்பட்டார். இந்தக் கொலையை மூடி மறைத்தவர் முன்னாள் உதவி பொலீஸ்மா அதிபர் சரத் லுகொட என நம்பப்படுகிறது. தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் எனக் காரணம் சொல்லப்பட்டது. இந்தக் கொலை தொடர்பாக சண்டே லீடர் என்ற செய்தித்தாளில் கவ்சா சப்ரி என்பவர் ஒரு நீண்ட கட்டுரை எழுதியிருந்தார். (http://www.thesundayleader.lk/2016/10/10/a-new-twist-in-sivarams-murder-probe/)

அதில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டிருந்தது,

சிவராமைக் கொன்றவர்கள் புளட் அமைப்பைச் சார்ந்த நால்வர் என்பது விசாரணையின் போது தெரியவந்துள்ளது. அதில் முக்கியமான சந்தேக நபர் பீட்டர் எனப்படும் சிறிஸ்கந்தராசா என்பவர் ஆகும். கொல்லப்பட்ட சிவராம் அவர்களின் அலைபேசி சிம் அட்டை பீட்டரிடம் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது (It was reported that the SIM card of Sivaram’s mobile phone was found in Peter’s possession). பீட்டர் புளட் தலைவர் சித்தார்த்தனின் தனிச் செயலாளர் ஆவர். கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட வாகனம் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களுக்குச் சொந்தமானது. வாகனப் பதிவு அப்படித்தான் உள்ளது.

இந்தக் காலக் கட்டத்தில் புளட் ஒட்டுக் குழு சிங்கள இராணுவத்தோடு சேர்ந்து வி.புலிகளுக்கு எதிராகப் போராடிக் கொண்டிருந்தது என்பது நினைவு கூரத்தக்கது. சிவராமின் கொலை தேசிய பாதுகாப்பைக் காரணம் காட்டி பொலீசாரினால் மறைக்கப்பட்டது. மேலிடத்து உத்தரவின்படி அது தொடர்பான கோப்பு மூடப்பட்டது.

கனடாவில் ஒலிபரப்பாகும் தமிழ்ச்சோலை வானொலியில் கிழமைக்கு ஒருதரம் சமகால அரசியல் பற்றி பேசுமாறு சிவராமைக் கேட்ட போது எந்தத் தயக்கமும் இன்றி சம்மதம் தெரிவித்தார். முதல் ஆய்வுரை ஏப்ரில் 17, 2005 இல் ஒலிபரப்பானது. இரண்டாவது ஆய்வுரை ஏப்ரில் 24, 2005 இல் ஒலிபரப்பானது. இதுவே அவரது இறுதி வானொலிப் பேச்சாக இருந்தது. காரணம் அவர் ஏப்ரில் 28, 2005 ஆம் நாள் படுகொலை செய்யப்பட்டார்.
ஊடக போராளி மாமனிதர் தர்மரட்ணம் …
மாமனிதர் சிவராம் உயிரோடு இருந்த போது ஒரு கனவு கண்டார். தமிழ்மக்கள் தன்மானத்தோடும் சமத்துவத்தோடும் பாதுகாப்போடும் நிம்மதியோடும் வாழக்கூடிய ஒரு சுதந்திர, சமத்துவ நாடு உருவாக வேண்டும் என்பதே அந்தக் கனவாகும். அந்தக் கனவை நனவாக்கத் தனது பேனாவைப் பயன்படுத்தினார்.

பேச்சு வார்த்தை மேசையில் தமிழ்மக்கள் தங்களது அடிப்படை உரிமைகளை சிஙகள-பவுத்த இனவாதிகளிடம் இருந்து பெறமுடியாது என்பது அவரது நிலைப்பாடாக இருந்தது. “பொதுக்கட்டமைப்பாவது மண்ணாங்கட்டியாவது சிங்களவர்கள் ஒன்றுமே தமிழர்களுக்குத் தரமாட்டார்கள்” என்று எழுதினார்.

போர்க்காலத்தில் நடந்த மனித உரிமை மீறல்கள், போர்க் குற்றங்கள், மானிடத்துக்கு எதிரான குற்றங்கள் பற்றி ஒரு கலப்பு விசாரணை நடத்தப்பட வேண்டும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை 2015 ஒக்தோபர் முதல் நாள் நிறைவேற்றிய 30-1 தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது. இந்தத் தீர்மானத்தை அமெரிக்கா முன்மொழிந்தது. அந்தத் தீர்மானத்துக்கு சிறிலங்கா அரசு அனுசரணை வழங்கியிருந்தது.

அதே தீர்மானம் பந்தி 11 இல் தனிமனிதர்கள், பத்திரிகையாளர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், சிறுபான்மை சமய உறுப்பினர்கள் மற்றும் சிவில் சமூக உறுப்பினர்கள், வழிபாட்டுத் தலங்கள் மீது நடத்தப்பட்டதாகக் கூறப்படும் தாக்குதல்கள் பற்றி விசாரணை நடத்தப்படுவதோடு அப்படியானவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதோடு அப்படியான தாக்குதல்கள் எதிர்காலத்தில் நடைபெறா வண்ணம் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனச் சொல்லப்பட்டுள்ளது.

எனவே சிவராம் மற்றும் அவர் போன்ற ஊடகவியாளர்கள் கொல்லப்பட்டது பற்றி விசாரணை நடத்த வேண்டும் என்பது ஐநாமஉ பேரவையின் தீர்மானம் ஆகும்.

அதன் அடிப்படையிலேயே மாமனிதர் சிவராம் மாத்திரம் அல்ல படுகொலை செய்யப்பட்ட ஏனைய ஊடகவியலாளர்கள் பற்றியும் நீதி விசாரணை ஆணைக் குழுவொன்று நியமிக்கப்பட வேண்டும். இவர்களது படுகொலைக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை என்பது வேதனை அளிக்கிறது. நீதி கிடைக்கும் வரை நாம் தொடர்ந்து போராட வேண்டும்.

(நக்கீரன்)

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.