மட்டக்களப்பு மத்தி கல்வி வலயம் அறுபது சதவீத கல்வி வளர்ச்சியை எட்டியுள்ளது

மட்டக்களப்பு மத்தி கல்வி வலயம் ஒரு வருடகாலத்தில் அறுபது சதவீத கல்வி வளர்ச்சியை எட்டியுள்ளதாக வலயக் கல்விப் பணிப்பாளர் டாக்டர் எம்.எஸ்.எம்.உமர் மௌலானா தெரிவித்துள்ளார்.

கடந்த வருடம் இந்த வலயத்தில் 60 மாணவர்கள் மாத்திரமே 9 ஏ சித்திகளைப் பெற்றிருந்தனர். இம்மறை நூறு மாணவர்கள் 9 ஏ சித்திகளைப் பெற்றுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

இதுதொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்-

அண்மையில் வெளியிடப்பட்ட க.பொ.த சாதாரண தர பரீட்சைப் பெறுபேறுகளின் படி மட்டக்களப்பு மத்தி கல்வி வலயம் நாட்டிலுள்ள 97 வலயங்களில் 42ஆம் இடத்தினைப் பிடித்துள்ளது. கடந்த வருடம் தேசிய மட்டத்தில் 57 ஆம் இடத்திலிருந்த எமது வலயம் இம்முறை 15 படிகளை பின்தள்ளியுள்ளமை சாதனையாகும்.

இந்நிலையில் ஏறாவூரில் (10 ஏ சித்திகளைப் பெற்றது) அறபா வித்தியாலயம் மற்றும் றகுமானியா மகா வித்தியாலயம் (100 வீத சித்தி பெற்றது) பூனொச்சிமுனை இக்றா வித்தியாலயம், ஓட்டமாவடி – சாதுலியா வித்தியாலயம் மற்றும் அறபா வித்தியாலயம் ஆகிய ஐந்து பாடசாலைகள் இன்னும் மட்டக்களப்பு வலயத்திற்குள் அடங்கியிருப்பனால் தேசிய கணிப்பீட்டில் எமது நிலை குறைவைக் காட்டுவதாக அதிர்ச்சியான தகவலையும் அவர் குறிப்பிட்டார்.

அப்பாடசாலைகளை எமது வலயத்திற்குப் பெற்றுத்தர வேண்டுமென்ற நடவடிக்கையை முன்னெடுத்திருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். இந்த ஐந்து பாடசாலைகளின் பரீட்சைப் பெறுபேறுகள் எமது வலயத்துடன் கணிப்பீடு செய்யப்பட்டிருந்தால் தேசிய மட்டத்தில் மேலும் 3 படிகளைத் தாண்டி 39ஆம் இடத்தைப் பிடித்திருக்க முடியும்.

எமது வலயத்திலுள்ள 31 பாடசாலைகளின் மாணவர்கள் இம்முறை க.பொ.த சாதாரண தர பரீட்சையில் தோற்றி பெறுபேறுகளைப் பெற்றிருந்தனர். எனினும் 26 பாடசாலைகளின் பெறுபேறுகள் மாத்திரமே எமது கல்வி வலயத்திற்கான கணிப்பீட்டிற்கு உள்ளடக்கப்பட்டன. இது தவறுதலான ஒரு விடயமாகும். அதனை எதிர்காலத்தில் சீர்செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளோம்.

இதேவேளை கிழக்கு மாகாணத்திலுள்ள 17 வலயங்களில் எமது மட்டக்களப்பு மத்தி கல்வி வலயம் 5ஆம் இடத்தைப் பிடித்துள்ளது. மேலும் கிழக்கு மாகாண கல்வித் திணைக்களத்தின் கல்வி முன்னேற்றம் குறித்த ஆய்வின் பிரகாரம் எமது வலயம் தமிழ் மொழிமூல பாடசாலைகள் அமைந்துள்ள வலயங்களில் முதலாம் இடத்தினைப ;பிடித்துள்ளமை சிறப்பம்சமாகும்.

இந்நிலையில் நான் பலருக்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளேன். எமது கிழக்கு மாகாணத்தின் கல்வி முன்னேற்றத்திற்காக மாகாணக் கல்விப்பணிப்பாளர் எம்.கே.எம்.மன்சூர் அவர்கள் (3சீ-2எஸ்) ஒவ்வொரு மாணவனும் குறைந்தபட்சம் 3 சீ 2 எஸ் களையாவது பெறவேண்டும் என்ற அடிப்படையில் முன்வைத்த வேலைத்திட்டம் பெரும் வெற்றியைத் தந்தது.

அதுமாத்திரமின்றி கடந்த முறை எமது வலயத்தில் 61 மாணவர்கள் எந்தவொரு பாடத்திலும் சித்திபெறாதிருந்தனர். இவர்களைக் கருத்திற் கொண்டு விசேட வேலைத்திட்டம் ஒன்றை செயற்படுத்தினோம். இதன் பயனாக இம்முறை அது 49 ஆக குறைவடைந்துள்ளது. எதிர்காலத்தில் ஒரு பாடத்திலும் சித்தியடையாத எந்தவொரு மாணவனும் இருக்கக் கூடாது என்ற அடிப்படையில் செயலாற்றவுள்ளோம்.

எனவே எமது வெற்றிக்காக அர்ப்பணிப்புடன் செயலாற்றிய பாடசாலைகளின் அதிபர், அனைத்து ஆசிரியர்கள், வலயக் கல்விப்பணிமனையின் அனைத்து தரத்திலுமான அதிகாரிகள், ஊழியர்கள், பள்ளிவாயல்கள் சம்மேளனம் உள்ளிட்ட அரச சார்பற்ற நிறுவனங்கள் விசேட எமக்கு அவ்வப்போது ஊக்கத்தை வழங்கிய தேசிய மற்றும் உள்ளுர் ஊடகவியலாளர்கள், டிஜிடல் தொழில் நூட்பத்தைப் பயன்படுத்தி ஒத்துழைப்பு வழங்கிய நலன்விரும்பிகள் விசேடமாக அரசியல் பிரமுகர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றியினைத் தெரிவிக்கிறேன்.

குறிப்பாக இந்த வலயத்தில் நான் பணிப்பாளர் என்ற அதிகார நிலையிலிருந்து செயற்படாது கல்விச் செயற்பாட்டுக் குழுவின் தலைவராகவே பணியாற்றுகின்றேன். இதனாலேயே இந்த வெற்றி எமக்குக் கிடைத்துள்ளதாக கருதுகின்றேன்.

இந்த வெற்றி எனக்கு மாத்திரம் சொந்தமானதல்ல, அதற்கு அனைவருமே சொந்தக்காரர்கள் பாராட்டுக்குரியவர்கள். ஆனால் எமது நடவடிக்கைகளில் ஏதும் பிழைகள் விடப்பட்டிருந்தால், அவை எனது வழிகாட்டலில் உள்ள பிழை என பணிவுடன் ஏற்றுக்கொள்கின்றேன் என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.