தேர்தலை கால வரையறையின்றி பிற்போடுங்கள்- தமிழர் விடுதலைக் கூட்டணி கோரிக்கை!

நாட்டில் உள்ள அச்சுறுத்தலான நிலையில் தேர்தலை கால வரையறையின்றி பிற்போடுங்கள் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர்நாயகம் வீ.ஆனந்தசங்கரி தேர்தல் ஆணைக்குழுவிற்கு கடிதம் ஒன்றின் ஊடாக வலியுறுத்தியுள்ளார்.

குறித்த கடிதத்தினை இன்று (சனிக்கிழமை) அனுப்பிவைத்துள்ள அவர், நாட்டின் மூத்த பிரஜையாக பல சம்பவங்களை அனுபவித்துள்ள நிலையில் தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா அச்சுறுத்தலான நிலையில் தேர்தலை பிற்போடுவதே பொருத்தமானது எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து தேர்தல் ஆணைக்குழுவுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், “இதுவரை துன்பங்கள், அனர்த்தங்கள் அத்தனையையும் ஒன்று சேர்த்துப் பார்த்தாலும் எம்மை தற்போது அச்சுறுத்தி நிற்கும் கொரோனா வைரஸின் அச்சுறுத்தலை சமப்படுத்த முடியயாத அளவில் உள்ளமையை நான் உணர்கின்றேன்.

அபிவிருத்தியடைந்த நாடுகளே கொரோனா அச்சுறுத்தலிற்கு நிலைதடுமாறி நிற்கின்ற நிலையில் சிறிய நாட்டில் உள்ள நாம் இதை சாதாரண விடயமாகத் தட்டிக்கழிக்க முடியாது. எதிர்காலம் எப்படி அமையுமோ என்ற பீதிக்குள் மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

இந்நாட்டின் மூத்த பிரஜைகளில் ஒருவரான எனது கோரிக்கையாக, நிலைமை சீரடையும் வரை நடைபெறவிருக்கின்ற தேர்தலை கால வரையின்றி ஒத்திவைக்கப்பட வேண்டும் என வலியுறுத்துகின்றேன்.

அத்துடன், இப்பிரச்சினையில் அக்கறை கொண்ட அனைவரும் சுயநலமாக நோக்காது நாட்டின் நன்மை கருதி நிலமை சீரடையும்வரை தேர்தலை பிற்போட்டு உதவுமாறு கேட்டுக்கொள்கின்றேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.