மஹிந்தவின் கூட்டம்: கூட்டமைப்பும் பங்கேற்கும் – மாவை சேனாதிராஜா தெரிவிப்பு…

பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் அழைப்பில் எதிர்வரும் திங்கட்கிழமை அலரிமாளிகையில் நடைபெறும் கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பங்கேற்பதா? இல்லையா? என்பது தொடர்பில் குழப்பம்  எழுந்துள்ள நிலையில், அந்தக் கூட்டத்தில் பங்கேற்பது என்று பேச்சளவில் இணக்கம் ஏற்பட்டுள்ளது.

மஹிந்தவின் கூட்டத்தில் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பங்கேற்று கட்சி சார்பில் வேண்டுகோள்களைச் சமர்ப்பிப்பது தொடர்பில் பேச்சளவில் இணக்கம் ஏற்பட்டுள்ளது எனவும், எனினும், கூட்டமைப்பின் தலைமை இன்று இறுதித் தீர்மானம் எடுக்கும் எனவும் கூட்டமைப்பின் பிரதான பங்காளிக் கட்சியான இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

பழைய நாடாளுமன்றத்தைக் கூட்டுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிர்க்கட்சிகள் கடிதம் அனுப்பியிருந்தன. அது தொடர்பில் அமைச்சரவையில் ஆராயப்பட்டிருந்தது. இந்தநிலையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ச, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 225 பேரையும் நாளைமறுதினம்  திங்கட்கிழமை அலரிமாளிகைக்கு வருமாறு அழைத்திருந்தார்.

இந்த அழைப்பு கூட்டமைப்புக்கும் கிடைத்திருப்பதாகவும், அதில் கலந்துகொள்வோம் என்றும் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்  தெரிவித்திருந்தார். அந்தச் சந்திப்பில் நாட்டினதும் மக்களினதும் நலன் கருதிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடுகளைப் பிரதமரிடம் தாம் எடுத்துரைக்கவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்திருந்திருந்தார்.

ஆனால்,  எக்காரணம் கொண்டும் கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தை மீளக்கூட்ட முடியாது என்றும், எதிர்க்கட்சிகளின் கோரிக்கையைத் தான் ஏற்கப்போவதில்லை என்றும் தெரிவித்து நேற்றுமுன்தினம் மாலை ஜனாதிபதி பதில் கடிதம் அனுப்பியதையடுத்து சஜித் பிரேமதாஸ தலைமையிலான எதிரணிக் கூட்டில் உள்ளவர்கள் திங்களன்று மஹிந்தவின் கூட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை என்று முடிவெடுத்துள்ளன. இதையடுத்து இந்தக் கூட்டத்தில் தாம் கலந்துகொள்வதா? இல்லையா? என்று முடிவு எடுக்கவில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் நேற்று மாலை தெரிவித்திருந்தனர்.

இந்தநிலையில், நேற்றிரவு கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும், பங்காளிக் கட்சிகளின் தலைவர்களும் தொலைபேசியில் நடத்திய கலந்துரையாடலில் மஹிந்தவின் கூட்டத்தில் பங்கேற்று வேண்டுதல்களைச் சமர்ப்பிப்பது என்று இணக்கம் ஏற்பட்டுள்ளது. எனினும், இது தொடர்பில் இன்று இறுதித் தீர்மானம் எடுக்கப்பட்டு ஊடகங்களுக்கு அறிவிக்கப்படும் என்று தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா மேலும் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.