தேர்தலை நடத்துவதானால் சட்டங்களில் திருத்தம் தேவை – மஹிந்த தேசப்பிரிய தெரிவிப்பு

 “தற்போதுள்ள நிலைமை சீராகுவதற்கு இரண்டு ஆண்டுகள் ஆகலாம் என்று கூறுகின்றார்கள். ஆனால் நாடாளுமன்றத் தேர்தலை இனி நடத்துவதானால் தேர்தல் சட்டங்களில் மாற்றம் செய்யப்பட வேண்டும். தற்போதுள்ள சட்ட ஏற்பாடுகளுக்கு அமைவாக தேர்தலை நடத்த முடியாது.”

– இவ்வாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

தேர்தல்கள் ஆணைக்குழுவினருக்கும், அரசியல் கட்சிகளின் செயலர்களுக்கும் இடையிலான சந்திப்பு  இன்று இடம்பெற்றது. இந்தச் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இந்தச் சந்திப்பில் பேசப்பட்ட விடயங்கள் தொடர்பில் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்ததாவது:-

“தற்போதுள்ள நடைமுறையில் தேர்தலை நடத்த முடியாது. பல்வேறு நடைமுறை மாற்றங்கள் செய்யப்பட வேண்டும். அதனைச் செய்வதற்கு தேர்தல் சட்டங்களில் திருத்தம் செய்யப்பட வேண்டும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

ஏற்கனவே அரசமைப்பு ரீதியான சிக்கல்கள் இருக்கின்றது. இப்போது நீங்கள் (மஹிந்த) புதுப் பிரச்சினைகளைச் சொல்லியுள்ளீர்கள். சட்டங்களைத் திருத்த வேண்டும் என்று சொல்லியுள்ளீர்கள். அப்படியானால் அரசமைப்பின் 33 ஆவது பிரிவுக்கு அமைவாக உங்களுக்கு தரப்பட்டுள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி தேர்தல் சட்டங்களைத் திருத்த வேண்டும் என்று ஜனாதிபதிக்கு ஆலோசனை கூறுங்கள் என்று நான் தெரிவித்தேன்.

நாடாளுமன்றத்தைக் கூட்டுமாறு நாங்கள் சொல்ல முடியாது என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் குறிப்பிட, நாடாளுமன்றத்தை கூட்டுமாறு நீங்கள் சொல்ல முடியாதுதான். ஆனால், சட்டத் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற ஆலோசனையை ஜனாதிபதிக்கு முன்வைக்க அதிகாரம் உள்ளது. அதனைத்தான் சுட்டிக்காட்டுகின்றேன் என்று குறிப்பிட்டேன்.

இது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுடன் ஆராய்வதாக தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய குறிப்பிட்டார்” – என்றார்.
.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.