கேப்பாப்பிலவு தனிமைப்படுத்தல் நிலையத்தில் உயிரிழந்த இருவரினதும் உடலம், பலத்த குளறுபடிகளையடுத்து களிக்காட்டில் எரியூட்டப்பட்டது.

விஜயரத்தினம் சரவணன்

முல்லைத்தீவு – கேப்பாப்பிலவு, தனிமைப்படுத்தல் நிலையத்தில் தனிமைப்படுத்தலில் இருந்த முதியவர்கள் இருவர் 01.05.2020அன்று உயிரிழந்திருந்தனர்.

இவ்வாறு உயிரிழந்தவர்களின் இரத்த மாதிரிகள் கொரோனா பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், அதில் ஒருவருக்கு கொரோனா தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் அவரின் சடலத்தை  முல்லைத்தீவு – மாவடிப்பிலவு இந்து மயானத்தில் தகனம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இதனையடுத்து முல்லைத்தீவு வைத்தியசாலை வளாகத்திலிருந்து சடலம் தகனம் செய்வதற்கான வாகனத்தில் ஏற்றப்பட்ட நிலையில், வைத்தியசாலைக்கு முன்னால் ஒன்று கூடிய பிரதேச இளைஞர்கள் சடலத்தை குறித்த மாவடிப் பிலவு இந்து மயானத்தில் தகனம் செய்வதற்கு எதிர்ப்பு வெளியிட்டிருந்தனர்.

நாட்டில் கொரோனா தொற்று பரவி வரும் சூழலில், எந்தவொரு பாதுகாப்பும் இன்றி சடலத்தை தகனம் செய்ய முற்பட்ட வேளையிலேயே அவர்களால் எதிர்ப்பு வெளியிட்டது. அதேவேளை வவுனியாவிலுள்ள சடலங்களை மின் தகனம் செய்யும் மயானத்திற்கு குறித்த உடலை கொண்டு சென்று தகனம்செய்யுமாறும் பிரதேச இளைஞர்களால் உரியவர்களுக்கு கோரிக்கையும் விடுக்கப்பட்டது.

தொடர்ந்து வவுனியாவிற்கு குறித்த உடலை கொண்டுசென்று மின் தகனம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட நிலையில், அங்குள்ள மின்தகனம் செய்யும் இயந்திரம் பழுதடைந்துள்ளதாக வவுனியாவிலிருந்து உரியவர்களுக்கு அறிவித்தல் கிடைக்கப்பெற்றது.

இதனையடுத்து முல்லைத்தீவு – களிக்காடு பகுதியில் குறித்த உடல் ஏரியூட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந் நிலையில் இறந்த மற்றவருக்கும் கொரோனாத் தொற்று இல்லை என பரிசோதனை முடிவுகள் கடைத்ததும் அந்த உடலையும் சேர்த்து எரியுட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அந்தவகையில் முல்லைத்தீவு நீதவானின் அனுமதியுடன் இரு உடல்களும், இரவு 11.30மணியளவில் களிக்காட்டுப்பகுதியில் எரியூட்டப்பட்டன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.