ஓல்டன் தோட்டப்பகுதியில் 250 குடும்பங்களுக்கு இன்னும் அரச நிவாரணம் எதுவும் வழங்கப்படவில்லை – தோட்ட மக்கள் குற்றஞ்சாட்டு!

(க.கிஷாந்தன்)

அம்பகமுவ பிரதேச செயலகம் 320 ஜே – கிராம சேவகர் பிரிவிலுள்ள சாமிமலை ஓல்டன் தோட்டத்தில் வாழும் சுமார் 250 குடும்பங்களுக்கு இன்னும் அரச நிவாரணம் எதுவும் வழங்கப்படவில்லை என பிரதேச மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

அத்துடன், கிராம சேவகரோ அல்லது சமுர்த்தி அதிகாரிகளோ தோட்டத்துக்கு வரவில்லை எனவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

கொரோனா வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்துவதற்காக மார்ச் 20 ஆம் திகதி முதல் இலங்கையில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பெரும்பாலான மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வாழ்வாதாரத்தை இழந்தவர்களுக்காக 5000 கொடுப்பனவை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது. பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கும் இக்கொடுப்பனவு வழங்கப்படும் எனக் கூறப்பட்டது.

ஆனாலும் தமது ஊரில்  இன்னும் இக்கொடுப்பனவு வழங்கப்படவில்லை என  சாமிமலை ஓல்டன் தோட்ட மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். இதற்கான காரணம் ஏன் என புரியவில்லை எனவும் சுட்டிக்காட்டினர்.

” கொழும்பில் தொழில் புரிந்தவர்களும் வேலை இழந்து காணப்படுகின்றனர். அவர்களின் வருமானத்தை மட்டுமே நம்பியிருந்த குடும்பங்கள் நிர்க்கதியாகியுள்ளன. எனவே, உண்பதற்குகூட வழியின்றி தவிக்கும் நிலை உருவாகியுள்ளது. எனவே, அரசியல் வாதிகள் கவனம் செலுத்த வேண்டும். அரசாங்கத்தால் வழங்கப்படும் நிவாரண திட்டங்களை பெற்றுக்கொடுக்கவேண்டும்.” – எனவும் தோட்ட மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.