தமிழ் மக்களின் முக்கிய பிரச்சினைகளை பிரதமரிடம் எடுத்துச் செல்லும் கூட்டமைப்பு!

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் இடம்பெறும் சந்திப்பில் மக்களின் பல்வேறு முக்கிய பிரச்சினைகள் தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு விவாதிக்கவுள்ளதாக கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் நாளை (திங்கட்கிழமை) இடம்பெறவுள்ள விசேட சந்திப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கலந்துகொள்ளவுள்ளது.

இந்நிலையில் பிரதமருடனான சந்திப்பின் போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு தொடர்பாக செல்வம் அடைக்கலநாதனிடம் இன்று வினவியபோதே அவர் அவ்வாறு தெரிவித்தார்.

அவர் கூறுகையில், “பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடனான சந்திப்பில் தற்போதைய அரசியல் நெருக்கடி தொடர்பாக ஆராயப்படவுள்ளது. மேலும் எமது மக்களின் அன்றாட வாழ்க்கை பிரச்சினைகள் குறித்தும் ஆராயப்படவுள்ளது.

மேலும், தனிமைப்படுத்தலுக்கான முப்படையினருடைய முகாம்கள் எங்களுடைய பிரதேசத்திலே மக்கள் செறிந்து வாழ்கின்ற இடங்களில் காணப்படுகின்ற நிலை உள்ளது. இது தொடர்பாகவும் ஆராயப்படவுள்ளது.

குறிப்பாக எங்களுடைய சமூகத்தில் இருக்கின்ற பிரச்சினைகள், விவசாயிகளின் பிரச்சினை, மீனவ சமூகத்தின் பிரச்சினை, சிகையலங்கார தொழிலாளர்களின் பிரச்சினை, அன்றாட கூலி வேலை செய்கின்ற மக்களின் பிரச்சினை, விவசாயிகள், மீனவர்களின் பிரச்சினைகள் குறித்து பேசப்படவுள்ளது.

அத்துடன், மாணவர்களின் தற்போதைய கல்வி செயற்பாடுகள் தொடர்பாகவும் குறித்த சந்திப்பில் விவாதிக்க இருக்கின்றோம். முக்கியமான இலங்கை அரசாங்கம் எங்களுடைய மக்கள் சார்ந்த பிரச்சினைகளை கவனத்திற் கொள்ளாது இருப்பது தொடர்பாகவும் நாங்கள் சுட்டிக்காட்ட இருக்கின்றோம்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.