கொரோனா வைரஸை நாட்டில் முழுமையாக இல்லாதொழிக்க முடியும் – அரச புலனாய்வு பிரிவின் உதவிப் பணிப்பாளர்

30 வருட கால யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்ததினைப் போன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமைத்துவத்தின் கீழ் கொரோனா வைரஸை நாட்டில் முழுமையாக இல்லாதொழிக்க முடியும் என அரச புலனாய்வு பிரிவின் உதவிப் பணிப்பாளர் பராக்கிரம சில்வா தெரிவித்தார்.

தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று கருத்து வெளியிடும் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டார்.

சுகாதாரத்துடன் தொடர்புபட்ட இந்த நோய் தொற்றை தடுப்பதில் புலனாய்வு பிரிவு மேற்கொண்டு வரும் நடவடிக்கையில் தனிப்பட்டவர்களின் பிரத்தியோக தகவல்களுக்கு எந்தவித குந்தகமும் ஏற்படாது.

இதற்கான உறுதியை எம்மால் தெரிவிக்க முடியும். எமது பணி நோயை இல்லாதொழிப்பதற்கு சுகாதார பிரிவின் நோயை தடுப்பதற்கான முயற்சிகளுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாகும் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த வைரஸ் தொற்றை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளோம் என்றும் நாட்டிலிருந்து இதனை முழுமையாக இல்லாதொழிப்பதற்கான வலிமை சுகாதார பிரிவைப் போன்று பாதுகாப்பு தரப்பினருக்கும் இருப்பதாகவும் அவர் கூறினார்.

ஜனாதிபதியின் தொலைநோக்கு விடயங்களின் அடிப்படையிலே தற்பொழுது இந்த நோய் தொற்றை இல்லாதொழிப்பதற்கு புலனாய்வு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.

குற்றச்செயல்கள், போதைப்பொருள் கடத்தல் போன்றவற்றிலேயே புலனாய்வு பிரிவினர் பாரிய நடவடிக்கைகளில் மேற்கொள்கின்றனர்.

கொவிட் 19 என்பது சுகாதார துறையுடன் சம்பந்தப்பட்ட நோய் தொடர்பான விடயமாகும். இதில் இலங்கை புலனாய்வு பிரிவு தமது பணியை எவ்வாறு முன்னெடுக்கின்றது என்பது குறித்து அவர் விவரித்தார்.

கடந்த ஓரிரு தினங்களில் 400 கொவிட் 19 நோயாளர்கள் அடையாளங் காணப்பட்டிருந்த நிலையில் இந்த எண்ணிக்கை திடீரென 600 ஆக அதிகரித்தது.

இந்த நோய் மார்ச் மாத காலப்பகுதியிலே இலங்கையில் வேகமாக பரவ ஆரம்பித்தது. இதற்கு முன்னதாக நாம் இந்த நோய் எவ்வாறு எத்துறைகள் மூலம் பரவ ஆரம்பித்தது என்பதை 31 கொத்து அடிப்படையில் வகுத்து கொண்டோம்.

அதன் அடிப்படையில் சுற்றுலா பயணிகள், இரத்தினக்கல் வர்த்தகம், போதைப்பொருள், வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள், விசேடமாக இத்தாலி போன்ற நாடுகளில்ருந்து வந்தவர்கள், சுதுவெல்ல பகுதியில் போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்டிருந்தவர்கள் போன்ற பிரிவுகளின் அடிப்படையில் நாம் எமது புலனாய்வு நடவடிக்கைகளை விரிவுபடுத்தினோம்.

இதற்கமைவாக விசேடமாக சுதுவெல்ல பகுதியில் போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்டிருந்தவர்கள் இந்த நோயினால் பாதிக்கப்பட்டிருந்ததை அடையாளங் கண்டோம்.

இவர்களுள் ஒருவர் கிராண்ட்பாஸ் பகுதியில் போதைப் பொருளை பெற்றுள்ளார். இதனை விற்பனை செய்தவருக்கு கொரோனா தொற்று இருக்கவில்லை ஆனால் போதைப்பொருளை வாங்கியவருக்கு கொரோனா தொற்று காணப்பட்டுள்ளது.

இவர்கள் மூலம் போதைப் பொருள் விற்பனை செய்தவர் தொடர்பு கொண்டவர்கள் உள்ளிட்ட பல்வேறு மட்டத்தில் நாம் புலனாய்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு தகவல்களை பெற்று சுகாதாரப் பிரிவினருக்கு வழங்கினோம் என்றும் அவர் தெரிவித்தார்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.