மஹிந்தவின் ஆட்டத்துக்கு எம்மால் ஆடவே முடியாது! – நீதிமன்றம் செல்வது உறுதி என்கிறார் சஜித் பிரேமதாஸ

“ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுடன் இணைந்து பிரதமர் மஹிந்த ராஜபக்ச போடும் ஆட்டத்துக்கு எம்மால் ஆடவே முடியாது. அதுதான் அலரி மாளிகைக் கூட்டத்தைப் புறக்கணித்துள்ளோம்.”

– இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது:-

“பிரதமர், அலரி மாளிகையில் விசேட கூட்டத்தைக் கூட்டி ஊடகக் கண்காட்சியை நடத்த முற்படுகின்றார். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் அரசுடன் இணைந்து பயணிக்கின்றார்கள் என்று உள்நாட்டுக்கும் வெளியுலகத்துக்கும் அவர் படம் காட்டத் திட்டமிடுகின்றார். இதுக்கெல்லாம் எம்மால் வளைந்துகொடுக்க முடியாது.

எமது யோசனைகளை நிராகரித்துவிட்டு பழைய நாடாளுமன்றத்தைக் கூட்டவே மாட்டேன் என்று ஜனாதிபதி திட்டவட்டமாக அறிவித்துவிட்டார். எனினும், அதை எதிர்த்து நாம் நீதிமன்றம் சென்றிடுவோம் என்ற பயத்தில் ஜனாதிபதியும், பிரதமரும் இருக்கின்றனர். இந்தநிலையில் எம்மைச் சமாளிக்கவே அலரி மாளிகைக் கூட்டத்தை முற்கூட்டியே பிரதமர் ஏற்பாடு செய்துள்ளார். எனினும், நாம் நீதிமன்றம் சென்று நீதியைப் பெறுவதில் உறுதியாக இருக்கின்றோம்” – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்