நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை மீறிய 45 ஆயிரத்து 115 பேர் இதுவரை கைது

கடந்த மார்ச் மாதம் 20 ஆம் திகதி முதல் இன்றுவரையான கலப்பகுதிகளிலேயே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

அத்தோடு அவர்களிடம் இருந்து 11 ஆயிரத்து 699 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதேநேரம், மக்கள் அநாவசியமாக ஒன்றுகூடுவதை கட்டுப்படுத்துவதற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தேசிய அடையாள அட்டையின் இறுதி இலக்கத்திற்கு ஏற்ப வீடுகளில் இருந்து வெளிச்செல்வதற்கு வழங்கப்படும் அனுமதி, ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள பிரதேசங்களுக்கு மட்டுமே ஏற்புடையதாகும் என ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.

ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டுள்ள சந்தர்ப்பங்களில் வீடுகளில் இருந்து வெளிச்செல்வதற்கு இது எந்தவகையிலும் ஏற்புடையதல்ல என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏதேனும் ஒரு பிரதேசம் அல்லது கிராமம் இடர் வலயமாக குறிப்பிடப்பட்டிருந்தால் அத்தகைய வலயங்களுக்குள் பிரவேசிக்கவோ அல்லது அங்கிருந்து வெளிச் செல்லவோ எவருக்கும் அனுமதி வழங்கப்பட மாட்டாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்