மன்னாரில் ஊரடங்கு தளர்த்தப்பட்டபோதும் மக்கள் வெளியேற்றம் குறைவு

(தலைமன்னார் நிருபர் வாஸ் கூஞ்ஞ)
மூன்று நாட்களுக்கு பின்னர் மன்னாரில் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டபோதும் மக்கள் பொருட்கள் கொள்முதல் செய்வதில் பெரிதாக கவனம் செலுத்தவில்லை
மன்னார் பகுதியிலுள்ள முக்கிய நகரங்களில் மக்கள் வழமைபோன்றே காணப்பட்டபோதும் ஆங்காங்கே தங்கள் தேவைகளை பூர்த்தி செய்ததையும் நோக்கக்கூடியதாக இருந்தது
மன்னார் பகுதியில் இயங்கும் சதொச விற்பனை நிலையங்களுக்கு அத்தியாவசிய பொருள்களின் வரத்துக்குறைவால் ஒரிரு பொருட்கள் குறிப்பாக சீனி, அங்கர் பக்கற், மீன் ரின் போன்ற பொருட்கள் தட்டுப்பாடாக இருந்ததாகவும் நுகர்வோர் தெரிவித்தனர்.
மட்டுப்படுத்தப்பட்ட முறையில் இலங்கை போக்குவரத்து சபை பேரூந்து சேவைகள் இடம்பெற்றபோதும் ஓரு பஸ் வண்டியில் 24 பிரயாணிகளே பயணம் செய்ய கட்டுப்பாடு விதித்திருந்தமையால் பிரயாணிகள் தொகையும் வெகு குறைவாகவே காணப்பட்டது.
மன்னாருக்கு இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்ட  மரக்கறி விலைகள் குறைந்து காணப்பட்டபோதும் மன்னார்  மீன்பிடி பகுதியாக இருந்தும் இங்கு மீன்களின் விலை வெளி மாவட்டங்களுக்கு அனுப்பும் விலைகளைவிட உள்ளூரில் விலை அதிகமாக காணப்பட்டதாகவும் மக்கள் கவலை தெரிவித்தனர்.
நாளாந்தம் ஊரடங்கு சட்டம் நீடிக்க நீடிக்க நாளாந்த கூலி தொழிலாளிகளின் குடும்பங்கள் மிகவும் வறுமை கோட்டுக்கு தள்ளப்பட்டு வருவதாகவும் கவலை தெரிவிக்கப்பட்டது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.