முன்னாள் பா.உ கோடீஸ்வரன் அவர்களால் பிரதமரிடம் மகஜர் கையளிப்பு!

இன்றைய தினம் இடம்பெற்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பிரதமருக்கிடையிலான சந்திப்பின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் அவர்களினால் தொழில் நிமித்தம் அம்பாறை மாவட்டத்தை விட்டு வெளி மாவட்டங்களுக்குச் சென்று மாவட்டம் திரும்ப முடியாமல் அல்லலுறும் தொழலாளர்களினை மாவட்டத்திற்கு மீள அழைத்து வருவதற்கான முயற்சியாக அவர்களின் விபரங்கள் அடங்கிய மகஜர் பிரதமரிடம் கையளிக்கப்பட்டது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் அழைப்பினை ஏற்று இன்றைய தினம் கலந்துரையாடலுக்காக சென்றிருந்த வேளையிலேயே இவ்வாறு மகஜர் கைளிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

இதன் போது இச்சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டிருந்ததுடன், அவ்வவ் மாவட்டங்களின் பிரதிநிதிகளினால் தற்போதைய கொரோணா சூழ்நிலையில் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் விபரிக்கப்பட்டது. தொழில் நிமித்தம் வெளி மாவட்டங்களுக்குச் சென்று வர முடியாதவர்கள் மற்றும் சுயதொழிலில் ஈடுபடுபவர்களுக்கான நிவாரணங்களை உரிய முறையில் வழங்கல், பாடசாலைகளில் அமைக்கப்பட்டுள்ள, அமைக்கப்படவுள்ள தனிமைப்படுத்தல் முகாம்களை அகற்றி அதனைப் பிரத்தியேகமான இடங்களில் அமைத்தல் போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களினால் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டதுடன், பிரத்தியேகமாகத் தன்னால் இம்மகஜர் கையளிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் இதன் போது தேர்தல் தொடர்பில் எவ்வித கருத்துக்களும் முன்வைக்கப்படவில்லை எனவும், முற்றுமுழுதாகக் கொரோணா பற்றிய விடயங்கள் தொடர்பாகவே கலந்துரையாடப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.