ஆட்டையைப் போட்ட அரசியல்வாதி: நியமிக்கப்பட்டது விசாரணைக்கு குழு – தேர்தல்கள் ஆணைக்குழு அதிரடி…
யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்துக்கு தன்னார்வக் கொடையாளிகளால் வழங்கப்பட்ட நிவாரணங்களை, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தற்போதைய வேட்பாளருமான ஒருவரின் ஆதரவாளர்களுக்கு வழங்கியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு மூன்று பேர் கொண்ட குழுவை தேர்தல்கள் ஆணைக்குழு நியமித்துள்ளது.
இந்தத் தகவலை, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய கட்சிச் செயலர்களுடனான கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.
இந்தக் குழுவினர் இந்த வாரம் யாழ்ப்பாணத்துக்கு வந்து விசாரணைகளை முன்னெடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. அதற்கு முன்னதாக இந்தக் குற்றச்சாட்டுத் தொடர்பான ஆரம்பத் தகவல்களை அறிக்கையாக வழங்குமாறு யாழ்ப்பாணம் மாவட்ட உதவித் தெரிவத்தாட்சி அலுவலருக்கு, தேர்தல்கள் ஆணைக்குழுவால் கடிதம் தொலைநகல் மூலம் நேற்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
கொரோனா காரணமாக தொடர் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அரசின் உதவிகள் யாழ்ப்பாணம் மாவட்ட மக்களுக்குக் கிடைத்திருக்காத சூழலில் தன்னார்வக் கொடையாளிகளால் நிவாரணப் பொருள்கள் மாவட்டச் செயலகத்துக்கு வழங்கப்பட்டன. பாதிக்கப்பட்ட மக்களுக்கு பகிர்ந்தளிக்க வழங்கப்பட்ட நிவாரணப் பொருள்கள், யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் வேட்பாளருமான ஒருவரின் ஆதரவாளர்களுக்கு மாவட்டச் செயலக அதிகாரிகளால் வழங்கப்பட்டமை தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவில் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.
இது தொடர்பில் கட்சிகளின் செயலர்களுடன் நேற்றுமுன்தினம் காலை இடம்பெற்ற கூட்டத்தில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய கடும் விசனத்துடன் கருத்துக்களை முன்வைத்துள்ளார்.
மேற்படி விவகாரம் தொடர்பில் மூவர் கொண்ட விசாரணைக் குழு நியமிக்கப்பட்டுள்ளது என்றும், விசாரணை முடிவில் அதிகாரிகள் தவறிழைத்திருந்தமை உறுதிப்படுத்தப்பட்டால் அவர்களுக்கு எதிராக மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
அதேவேளை, இந்த விடயம் தொடர்பான ஆரம்பத் தகவல்களை வழங்குமாறு யாழ்ப்பாணம் மாவட்ட உதவித் தெரிவத்தாட்சி அலுவலரிடம் கோரிக்கையும் முன்வைக்கப்பட்டுள்ளது.
கருத்துக்களேதுமில்லை