தேசிய அடையாள அட்டை இறுதி இலக்க நடைமுறை அடுத்த வாரம் முதல் அமுல் – பொலிஸ்

ஊரடங்கு உத்தரவு அமுலில் உள்ள பகுதிகளில் தேசிய அடையாள அட்டை இறுதி இலக்க நடைமுறை அடுத்த திங்கட்கிழமை முதல் அமுலுக்கு வரும் என பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

இன்று (திங்கட்கிழமை) இடமபெற்ற விசேட ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார்.

தேசிய அடையாள அட்டையின் இறுதி இலக்கத்தை பயன்படுத்தி வெளியில் செல்லும் திட்டமானது ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள பிரதேசங்களில் மாத்திரமே நடைமுறையில் இருக்குமென ஜனாதிபதி ஊடகப் பிரிவு நேற்று அறிவித்திருந்தது.

மக்கள் அநாவசியமாக ஒன்றுகூடுவதை கட்டுப்படுத்துவதற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தேசிய அடையாள அட்டையின் இறுதி இலக்கத்திற்கு ஏற்ப வீடுகளில் இருந்து வெளிச்செல்வதற்கு வழங்கப்படும் அனுமதி ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள பிரதேசங்களுக்கு மட்டுமே ஏற்புடையதாகும் என அறியத்தரப்படுகின்றது.

ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டுள்ள சந்தர்ப்பங்களில் வீடுகளில் இருந்து வெளிச்செல்வதற்கு இது எந்தவகையிலும் ஏற்புடையதல்ல. ஏதேனும் ஒரு பிரதேசம் அல்லது கிராமம் இடர் வலயமாக குறிப்பிடப்பட்டிருந்தால் அத்தகைய வலயங்களுக்குள் பிரவேசிக்கவோ அல்லது அங்கிருந்து வெளிச் செல்லவோ எவருக்கும் அனுமதி வழங்கப்பட மாட்டாது.

கொழும்பு, கம்பஹா, புத்தளம் மற்றும் களுத்துறை மாவட்டங்களில் உள்ளோர் இவ்வாறு தேசிய அடையாள அட்டையின் இறுதி இலக்கத்தை பயன்படுத்தி தமது அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏனைய மாவட்டங்களில் உள்ளோர் ஊரடங்கு அமுலில் இல்லாத நேரத்தில் தேசிய அடையாள அட்டை நடைமுறையை பின்பற்றவேண்டிய அவசியம் இல்லை என தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்