கொரோனாவுக்குள் மறைந்து தோட்டங்களை துண்டாடுவதற்கு முயற்சிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தோட்டத்தொழிலாளர்கள் போராட்டம்

ஹட்டன் கே.சுந்தரலிங்கம்

ஹொரணை பெருந்தோட்ட கம்பனிக்கு சொந்தமான மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஸகெலியா மானெலு தோட்டத்தில் தேயிலை மலைகளை கொரோனாவுக்குள் மறைந்து துண்டாடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று 04.05.2020 நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

குறித்த தோட்டத்தில் கொரோனா தொற்றுப்பரவுவதாக தெரிவித்து சுமார் ஐந்நூறு ஆயிரம் தேயிலைச் செடிகளைக் கொண்ட ஒரு பகுதியினை தொழிலாளர்களுக்கு பிரித்து கொடுத்து அதிலிருந்து கொழுந்து பறிப்பதற்கு வற்புறுத்துவதாகவும் அவ்வாறு செய்யாது கொழுந்து பறிப்பவர்களுக்கு நாள் சம்பளத்தினை தோட்ட நிர்வாகம் வழங்க மறுப்பதாகவும் தேயிலைக் கொழுந்து நெறுப்பதற்கு தராசுகளையும் லொறியையும் அனுப்பாது விடுவதாகவும் தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த தோட்டத்தில் கொரோனா தொற்று அச்சுறுத்தல் ஏற்பட்டது முதல் அரசாங்கம் கூறிய சுகாதார அறிவுறுத்தல்களுக்கமைய ஒரு மீற்றர் சமூக இடைவெளியினை பேணியவாறே கொழுந்துகளை கொய்து வந்துள்ளதாகவும், இந் நிலையில் தேயிலை மலைகள் துண்டாடப்பட்டு வழங்குவதன் மூலம் தங்களுக்கு ஒரு நாள் சம்பளத்துக்கு தேவையான கொழுந்தின் அளவினை பறிக்கமுடியாது உள்ளதாகவும். இவ்வாறு கொழுந்து பறிப்பதன் மூலம் தொழிலாளர்கள் பாரிய இடைவெளியிலேயே மிகவும் தூரமாகவே கொழுந்துகளை பறிக்க வேண்டிய நிலை ஏற்படுவதாகவும் இதன்போது சிறுத்தையோ தேனிக்களோ ஒருவரை தாக்கினால் காப்பாற்றக்கூட முடியாதநிலை ஏற்படுவதாகவும் இவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதே வேளை தற்போது தொழிலாளர்கள் வேலைக்கு செல்லும் போது தங்களுடைய பிள்ளைகளை சிறுவர் பராமரிப்பு நிலையங்களிலேயே விட்டுச் செல்கின்றனர்.அவ்வாறு ஒரு பராமரிப்பு நிலையத்தில் சுமார் 30 – 40 குழந்தைகள் இருக்கின்றனர். இவர்களுக்கு எவ்வித பாதுகாப்பும் கிடையாது அப்படியென்றால் இவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்றாதா? அதேநேரம் தோட்டங்களில் தொழிலாளர் குடியிருப்புக்கள் மிகவும் நெருக்கமாகவே உள்ளன.

எட்டடி அறைக்குள் நான்கு ஐந்து குடும்பங்கள் உள்ளன. அப்படியென்றால் அவர்களுக்கு கொரோனா தொற்றாதா? ஆகவே தோட்ட நிர்வாகம் கொரோனாவுக்குள் மறைந்து தோட்டங்களை துண்டாடி அதனை தொழிலாளர்களையே பராமாரிக்கச் செய்து மேலும் மேலும் லாபத்தினை மாத்திரம் ஈட்டிக்கொள்வதற்காக மிகவும் தந்திரோபாயமான முறையில் இதனை செய்வதாக தொழிலாளர்கள் குற்றஞ் சுமத்துகின்றனர்.

இது குறித்து மற்றுமொருவர் கருத்து தெரிவிக்கையில் தோட்ட நிர்வாகம் தொழிலாளர் பாதுகாப்பு தொடர்பாக எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. கைகழுவுவதற்கு வசதிகள் செய்துககொடுக்கவில்லை கொழுந்து நெருக்கும் போது சுகாதாரப் பொறி முறைகள் பேணப் படுவதில்லை. இவ்வாறான நிலையிலேயே தாங்கள் கொழுந்து பறிப்பில் ஈடுபட்டு வருவதாகவும் கடந்த 24ம் திகதி முதல் துண்டாடப்பட்டு கொழுந்துகளை பறிக்க நிர்ப்பந்தத்தினை மறுத்து வழமையான கொழுந்து பறிப்பில் ஈடுபட்டு பறித்த கொழுந்துகளையும் சுமார் 450 கிலோவுக்கு மேற்பட்ட தேயிலைக்கொழுந்து கோயிலுக்கு அருகாமையில் வீசப்பட்டுள்ளதாகவும் இவர்களின் அநீதியான செயல்குறித்து பேசுவதற்கு முன்வருவதில்லை.

என்றும் இதனால் தொழிலாளர்கள் பாரிய அளவில் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாகவும் கொரோனா தொற்று ஏற்பட்டதில் இருந்து தங்களுக்கு சம்பளமோ நிவாரணமோ இல்லாத நிலையில் பல்வேறு துன்பங்களுக்கு முகங்கொடுத்து வருகின்ற நிலையில் தோட்டநிர்வாகம் இவ்வாறு தொழிலாளர்களை மேலும் துன்புறுத்துவதாகவும் இவர்கள் தெரிவிக்கின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.