பாடசாலைகளை மீளத்திறத்தல்! – இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்க ஊடக அறிக்கை.

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அபாயகரமான சூழ்நிலை இன்னும் வழமைக்குத் திரும்பவில்லை. உலகளாவிய ரீதியில் உயிரிழப்புகள் அதிகரித்த வண்ணம் உள்ளன. இலங்கையிலும் கொறோனா நோய்த் தொற்றாளர்கள் இனம்காணப்பட்டவண்ணம் உள்ளனர். இலங்கையில் ஒன்பதாவது மரணம் நிகழ்ந்துள்ளது. இன்னும் பலர் பரிசோதனை செய்யப்படாத நிலையில் மறைந்தும் உள்ளதாக மருத்துவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இதனை முழுவதுமாக ஆராய்ந்து உணர்த்தும் கடமை முழுக்க முழக்க மருத்துவத் துறைக்கே உரியது.

இந்நிலையில் பாடசாலைகளை அரசாங்கம் திறப்பது தொடர்பாக ஊடகங்களில் பல்வேறு செய்திகள் வெளியாகின்றன.

இதைவிட பலர் பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பாக கருத்துக்களைப் பகிர்ந்தும் வருகின்றனர்.

ஒட்டு மொத்த உலகம் முழுவதும் பல கோடிக்கணக்கான மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் பாதிக்ககப்பட்டுள்ளன. அதே போன்று இலங்கையிலும் சில மாதங்கள் கல்வி நடவடிக்கைகள் தடைப்பட்டுள்ளன.

மாணவர்கள் பாடசாலைக்குச் செல்லாமல் மாற்றீடாகச் செய்யப்படும் எந்த முயற்சிகளும் முழுமையாகப் பயனளிக்காது என்பது கல்விப்புலம் சார்ந்த பலரது ஜதார்த்தமான கருத்து.

மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் மீளவும் ஆரம்பிக்கப்படவேண்டும் என்பதில் இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளது. அதற்காக பாடசாலைகளை ஆரம்பிக்கக்கூடாது என தொழிற்சங்க ரீதியாக நாம் எந்தவிதமான எச்சரிக்கைகளையும் அரசாங்கத்திற்கு விடுக்கத் தேவையில்லை. காரணம் அனைத்துலகிலும் நடப்பதனை அரசாங்கம் அறிந்திருக்க வேண்டும். சுகாதாரத்துறையினரின் அறிவித்தல்களை பின்பற்ற வேண்டும்.

அவ்வாறு பாடசாலைகளை மீளத்திறந்து பிள்ளைகள் வரவழைக்கப்படுவார்களாக இருந்தால் அவர்களின் முழுப்பாதுகாப்பிற்கும் அரசாங்கமே பொறுப்பாக வேண்டும்.

மாறாக அதிபர்களையோ, ஆசிரியர்களையோ பாதுகாப்பாளர்களாக நியமிக்கமுடியாது. அதற்கான காரணங்கள் பல உள்ளன.

பாடசாலைகளை மீளத்தொடக்குவதானால்……

  1. நாட்டில் எந்தப் பாகத்திலும் கொறோனா தொற்றாளர்கள் இருக்கக்கூடாது.
  2. முகக்கவசங்களுடன் மாணவர்கள் பாடசாலைகளுக்குச் செல்லக்கூடாது.
  3. ஆசிரியர்கள் முகக்கவசங்கள் இன்றி கற்பிக்கும் சூழல் அமையவேண்டும்.
  4. மாணவர்கள் முகக்கவசம் பாவிப்பதாக இருந்தால் அனைத்து மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் முகக்கவசங்களை அரசாங்கமே வழங்க வேண்டும்.(வேறுபடுத்தல்களைத் தவிர்க்க)
  5. மாணவர்களின் முழுவரவு நிலையையும் உறுதிப்படுத்த வேண்டும்.
  6. அதிபர்கள், ஆசிரியர்கள் சுயமாகச் செயற்படும் நிலை உருவாகவேண்டும்.(கொறோனா தொடர்பான நாளாந்த அறிக்கை தயாரித்தல் பணி நடைபெறக்கூடாது)
  7. நாட்டில் உள்ள அனைத்துப் பாடசாலைகளிலும் நடைபெற்று முடிவடைந்த பாட அலகுகளுக்கே பரீட்சைகள் நடைபெறவேண்டும்.

இதனை விடுத்து அமைச்சர் திறப்பேன் என்பதும், சுகாதாரப் பணிப்பாளர் அதற்கான வாயப்பில்லை என்கின்ற செய்திகள் மாணவர்கள் மத்தியில் மட்டுமன்றி பெற்றோர் மத்தியிலும் ஏன் அதிபர்கள் ஆசிரியர்கள் மத்தியிலும் குழப்பத்தை ஏறிபடுத்துகின்றது.

ஆகையால் பாடசாலைகளைத் திறப்பது தொடர்பாக நாம் கூறியுள்ள விடயங்களில் கரிசனை செலுத்தி சுகாதாரத்துறையினரின் உறுதிப்படுத்தலைப் பெற்றுக்கொண்டு அறிவித்தல்களை வெளியிடுமாறு இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் கேட்டுள்ளது.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்