ஊரடங்கு இன்றிய மாவட்டங்களில் 2,300 இ.போ.ச. பஸ்கள் சேவையில்!

ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படாத மாவட்டங்களில் சுமார் 2 ஆயிரத்து 300 பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்படுகின்றன என்று இலங்கை போக்குவரத்துச் சபை தெரிவித்துள்ளது.

ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டிருந்தாலும்,  மாவட்டங்களுக்கு இடையிலான பஸ் சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன எனவும், மாவட்டங்களுக்குள் மாத்திரம் பஸ் சேவைகள் இடம்பெறுகின்றன எனவும் இ.போ.சபையின் தலைவர் கிங்ஸ்லி ரணவக தெரிவித்துள்ளார்.

அனைத்து பஸ்களிலும் பயணிகள் அங்கும் இங்குமாக இஸட் வடிவில் உட்கார அனுமதிக்கப்படுகின்றனர் எனக் குறிப்பிட்டுள்ள அவர், கடமைகளில் ஈடுபடும் பயணிகளே அதிகளவில் பஸ்களில் பயணிக்கின்றனர் எனவும் கூறியுள்ளார்.

எவ்வாறாயினும், ஆசனங்களின் எண்ணிக்கைக்கேற்ப பயணிகளைக் கொண்டு செல்ல முடியுமா என்பது தொடர்பில்  சுகாதாரப் பிரிவினருடன் கலந்துரையாடல் நடத்தப்படுகின்றன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டுள்ள மாவட்டங்களில் மாத்திரம் பயணிகள் போக்குவரத்துக்காக பஸ் சேவைகள் இடம்பெற்று வரும் போதிலும், ஊழியர்களின் போக்குவரத்துக்காக ஊரடங்குச் சட்டம் அமுலிலுள்ள கொழும்பு, களுத்துறை, கம்பஹா மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் பஸ் சேவைகள் இடம்பெறுகின்றன எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.