2020 பொதுத் தேர்தல் – சுகாதார வழிகாட்டுதல்கள் அடுத்த வாரம்..!

2020 பொதுத் தேர்தலை நடத்துவதற்கான வழிகாட்டல் கையேடு அடுத்த வாரத்திற்குள் தயாராக இருக்கும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

நாட்டில் கொரோனா வைரஸ் தொடர்பான அச்சுறுத்தலுக்கு மத்தியில் ஜூன் 20 ஆம் திகதி சுகாதார வழிகாட்டலுடன் பொதுத் தேர்தல் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஒட்டுமொத்த நாட்டின் ஆரோக்கியத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்ய மேலதிக நடவடிக்கைகள் குறித்து தேர்தல் ஆணைக்குழு மற்றும் சுகாதார மற்றும் சுதேச மருத்துவ சேவைகள் அமைச்சின் அதிகாரிகள் கலந்துரையாடி வருகின்றனர்.

தேர்தல் பிரச்சாரத்திற்கு, தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் அதன் ஊழியர்கள் மட்டுமல்லாமல், அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்களும் பின்பற்றக்கூடிய ஒரு சுகாதார வழிகாட்டுதலைத் தயாரிக்க ஆணைக்குழு சுகாதார அமைச்சு, தலைமை தொற்றுநோயியல் நிபுணர்கள் மற்றும் சமூக மருத்துவர்களுடன் ஆலோசித்து வருவதாக தேர்தல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

பொதுத் தேர்தலை வெற்றிகரமாக நடத்த, அனைத்து மாவட்டங்களும் பணிகளைத் தொடங்க வேண்டும் என்றும் மேலும், நடைமுறையில் உள்ள பயணக் கட்டுப்பாடுகளும் அகற்றப்பட்டு போக்குவரத்து சேவைகள் இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டும் என்றும் அவர் கூறினார்.

தேர்தல் நடைபெறும்போது பிற அரச அதிகாரிகளின் உதவிகளும் தங்களுக்கு தேவைப்படுகின்றது குறிப்பாக வாக்குச் சாவடிகளில் உதவுவதற்கும் பின்னர் வாக்குகளை எண்ணுவதற்கும் பலர் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு உதவி புரிகின்றனர் என சமன் ஸ்ரீ ரத்நாயக்க கூறினார்.

எனவே தேர்தல்கள் ஆணைக்குழு ஒரு பெரிய குழுவினரை ஒருங்கிணைக்க வேண்டும், மேலும் பொலிஸ் அதிகாரிகளின் உதவியும் தேவைப்படும்.இந்த வளங்கள் அனைத்தும் இருக்கும்போதே தேர்தலை நடத்த முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இப்போதைக்கு, தேர்தல் நாள் ஜூன் 20 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது, ஆனால் சுகாதார அதிகாரிகளின் பரிந்துரைகள் மற்றும் கொரோனா வைரஸ் பரவலின் நிலை ஆகியவற்றின் அடிப்படையில் தேர்தலை நடத்துவதா அல்லது தள்ளிவைப்பதா என முடிவு செய்யப்படும் என்றும் சமன் ஸ்ரீ ரத்நாயக்க குறிப்பிட்டார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.