சுகாதார முறைப்படி வேலைகளை முன்னெடுக்க நடவடிக்கை- கிளி. சிகை அலங்கரிப்பு சங்கம்

சுகாதார முறைப்படி சிகை அலங்கரிப்பு வேலைகளை முன்னெடுக்கவுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட சிகை அலங்கரிப்பு சங்கம் தெரிவித்துள்ளது.

கிளிநொச்சியில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது சங்கத்தின் செயலாளர் தர்மராசா யுகேசன் இந்த விடயத்தைத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், “முறையான சுகாதார முறைப்படி சிகை அலங்கார வேலைகள் முன்னெடுக்கப்படவுள்ளது.

அதற்கமைவாக சிகை அலங்கார வேலைக்கு வருகைதரும் வாடிக்கையாளர்கள் அங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ள அறிவுறுத்தல்களைப் பின்பற்ற வேண்டும்.

அதேவேளை, வருகை தரும் வாடிக்கையாளர்கள் சுகாதாரத்தைப் பிற்பற்றும் வகையிலும் தொற்றுக்களிலிருந்து பாதுகாக்கும் வகையிலும் போர்வை துணிகளைக் கொண்டுவர வேண்டும்.

அதேவேளை வீடுகளுக்கு அழைத்து சிகை அலங்காரம் செய்யும் சந்தர்ப்பங்களில் பாதுகாப்பு தொடர்பாக மக்கள் கவனம் செலுத்த வேண்டும். பாதுகாப்பற்ற முறையில் வீடுகளுக்கு அழைத்து வேலைகளைச் செய்வதால் ஏற்படும் பாதிப்புக்கள் தவிர்ப்பதற்காக வீடுகளுக்கு அழைப்பதைத் தவிர்க்குமாறு சங்கம் வலியுறுத்துகிறது.

மேலும், சிகை அலங்கரிப்பு மாத்திரமே முன்னெடுக்கப்படும் என்பதோடு, முகச் சவரம் மேற்கொள்ளப்படாது. அதேவேளை சில காரணங்களிற்காக முடி வெட்டுவதற்காக அறவிடப்படும் பணத்தினை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்படலாம்.

இதேவேளை, சங்கத்தின் உறுப்பினர் அ.மார்கஸ் குறிப்பிடுகையில், “சுகாதார முறைமையைப் பேணும் வகையில் சில நடைமுறைகளை நாம் பின்பற்ற வேண்டியுள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தைப் பொறுத்தளவில் பல குடும்பங்கள் எம்மைப் போன்று பாதிக்கப்பட்டவர்கள். சுகாதாரத் துறையினரால் குறிப்பிடப்பட்ட முறைகளிற்கு அமைவாக நடைமுறைப்படுத்தப்படும் சந்தர்ப்பங்களில் செலவு அதிகரிக்கின்றது.

அதனை ஈடு செய்வதற்காக கூலியை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்படும். சுகாதாரப் பொருட்களைக் கொள்வனவு செய்யும்போதே இந்த அதிகரிப்பு ஏற்படும்.

அதனைத் தவிர்க்கும் வகையில் அரசாங்கமோ, நிறுவனங்களோ எமக்கு உதவினால் மக்களிற்கு ஏற்படும் அதிகரித்த பணத்தை தற்போது உள்ள நடைமுறையிலேயே பேண முடியும்” எனத் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.