நெருக்கடியான நிலையில்  கூட்டமைப்பு ஒத்துழைப்பு  – வரவேற்கின்றார் விமல்  


“பிரதமர் மஹிந்த ராஜபக்சவிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசியல் நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு கோரிக்கைகளை சமர்ப்பிக்கவில்லை. நெருக்கடியான நிலையில் கூட்டமைப்பு அரசின் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்க முன்வந்தமை ஏற்றுக்கொள்ளக்கூடிய – வரவேற்கத்தக்க செயற்பாடாகும்.”

– இவ்வாறு அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் காரியாலயத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துரைக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறியதாவது:-

“கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த  நாடு தழுவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம்  அமுல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பொருளாதார  ரீதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு 5 ஆயிரம் ரூபா நிவாரணத் தொகை வழங்கியுள்ளது.

இதனையும் எதிர்த்தரப்பினர் தங்களின் அரசியல் தேவைக்குப் பயன்படுத்திக் கொள்கின்றார்கள். அரசு 20 ஆயிரம் ரூபா வழங்க வேண்டும் வலியுறுத்துகின்றார்கள்.

கடந்த ஆட்சியில் இயற்கை அனர்த்தத்தாலும், அரசின் முறையற்ற செயற்பாடுகளினாலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் மற்றும் நட்டஈடு ஏதும் இதுவரை காலமும் வழங்கப்படவில்லை. இவ்வாறான பின்னணியில் உள்ளவர்கள் எமது அரசைத் தற்போது விமர்சிப்பது நகைப்புக்குரியது.

கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்தவும், சவால்களை வெற்றிக்கொள்ளவும் எதிர்த்தரப்பினர் எந்தச் சந்தர்ப்பத்திலும் அரசுக்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை.

பிரதமர் தலைமையில் அலரி மாளிகையில் கடந்த 4ஆம் திகதி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களது பங்குப்பற்றலுடன் முக்கிய பேச்சு இடம்பெற்றது.

இதன்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் பிரதமரிடம் கோரிக்கை உள்ளடங்கிய பத்திரத்தைச் சமர்ப்பித்தார்கள். இது தொடர்பில் மாறுபட்ட கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.

அரசியல் நோக்கங்களை அடிப்படையாக்க் கொண்டு கூட்டமைப்பினர் பிரதமரிடம் எவ்வித கோரிக்கைகளையும் விடுக்கவில்லை.

அரச தரப்பினருக்கும் கூட்டமைப்பினருக்கும் இடையில் அரசியல் ரீதியான நிலைப்பாடு வேறுபட்டதாகவே காணப்படுகின்றது. நெருக்கடி நிலையில் அரசின் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்கக் கூட்டமைப்பினர் முன்வந்தமை ஏற்றுக்கொள்ளக் கூடியது” – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.