மனித வெடிகுண்டுகளாக அநாதைப் பிள்ளைகள்: சஹ்ரான் குழுவினர் குறித்த அதிர்ச்சித் தகவல்!
ஏப்ரல்-21 உயிர்த்த ஞாயிறு தின தற்கொலைத் தாக்குதல்களின் மூளையாகச் செயற்பட்டதாக நம்பப்படும் பயங்கரவாதி சஹ்ரான் ஹசீமின் குழு, புத்தளம் – வனாத்துவில்லு பகுதிகளில், பெற்றோரை இழந்த அநாதரவான பிள்ளைகளுக்கு ஆயுதப் பயிற்சி அளித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
குறித்த பிள்ளைகளை மனித வெடிகுண்டுகளாக சமூகமயப்படுத்த திட்டமிட்டிருந்ததாக குற்றப் புலனாய்வுத் திணைக்கள விசாரணைகளில் தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
இதற்காக, பயங்கரவாதி சஹ்ரானின் சகோதரனான சாய்ந்தமருதில் தற்கொலை செய்துகொண்ட பயங்கரவாதி ரில்வான், வனாத்துவில்லு பகுதியில் உள்ள அரபுக் கல்லூரிக்கு சென்று ஆயுதம் மற்றும் கைக்குண்டு பயன்பாடு குறித்து பயிற்சி கொடுத்து, அந்நிய மதத்தவர்களைக் கொலை செய்வதற்கு தமக்கு போதனை செய்ததாக, அந்த அரபுக் கல்லூரி மாணவர்கள் விசாரணைகளில் வெளிடுத்தியுள்ளதாக சி.ஐ.டி. தரப்பில் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவ்வாறு 20 இற்கும் அதிகமான மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாக நம்பப்படும் நிலையில், அதில் 12 பேரிடம் இதுவரை சி.ஐ.டி. வாக்கு மூலங்களைப் பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறான பின்னணியிலேயே, உயிர்த்த ஞாயிறு தினத்தன்று கடந்த ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற தொடர் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களுடன் புத்தளம் பிரதேசத்தின் அமைப்பொன்றும் தொடர்புப்பட்டுள்ளமை தொடர்பாக சி.ஐ.டி. தகவல்களை வெளிப்படுத்திக்கொண்டிருந்த நிலையில் அதன் பொறுப்பாளராக செயற்பட்டவர், கடந்த மே 3 ஆம் திகதி கைதுசெய்யப்பட்டார்.
இந்நிலையில், அவர் நடத்திவந்த அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றின் அலுவலகம் ஒன்று, கொழும்பு 15, மட்டக்குளி பகுதியில் பள்ளிவாசல் ஒன்றின் 2ஆம் மாடியில் உள்ள அறையொன்றில் இயங்கி வந்தமை கண்டறியப்பட்டுள்ள நிலையில், கடந்த 4ஆம் திகதி சி.ஐ.டி.யினரால் அந்த பள்ளிவாசல் அறை அதிரடியாக சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
இதன்போது, அங்கிருந்து பல ஆவணங்கள், குறித்த அமைப்புக்கு நிதி வழங்கியவர்கள் குறித்த பற்றுச் சீட்டுக்கள் உள்ளிட்டவை சி.ஐ.டியால் மீட்கப்பட்டுள்ளன. தற்போது அவ்வறைக்கு சீல் வைக்கப்பட்டு பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதில் கைதுசெய்யப்பட்ட அரச சார்பற்ற நிறுவனப் பொறுப்பாளர், பெற்றோரை இழந்த 24 பிள்ளைகளை கொழும்பிலிருந்து அழைத்துச் சென்று, குறித்த அரபுக் கல்லூரிக்கு கையளித்துள்ளமை தொடர்பான தகவல்கள் உள்ளதாகவும், அது குறித்து தீவிர விசாரணைகள் இடம்பெறுவதாகவும் சி.ஐ.டி தகவல்கள் கூறின.
குறித்த நபரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் பின்னர், தற்போது வரைக்கும் 24 பிள்ளைகளில் 12 பிள்ளைகளைக் கண்டறிந்து வாக்குமூலம் பெற்றுள்ளதாகவும், அவர்கள் அனைவரும் 12 முதல் 15 வயதுகளுக்கு இடைப்பட்ட சிறுவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் அந்த அநாதரவான பிள்ளைகளுக்கு, வனாத்துவில்லு – காரைதீவு வீதியில் 6 ஏக்கர் விஸ்திரமான இடத்தில் பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அது குறித்த மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
குறித்த சிறுவர்கள் தங்கவைக்கப்பட்டிருந்த இடம், அது சார்ந்த விடயங்களுக்கு செலவு செய்தவர்கள் என அனைத்து விடயங்களையும் வெளிப்படுத்த இது குறித்த மேலதிக விசாரணைகள் சி.ஐ.டி., சி.ரி.ஐ.டி. பிரதிப் பொலிஸ் மா அதிபர் நுவன் வெதிசிங்கவின் கீழ் இயங்கும் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவின் சிறப்புக் குழுவிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது
கருத்துக்களேதுமில்லை