5000 ரூபாய் கொடுப்பனவு கிடைக்காதவர்கள் பிரதேச செயலாளரிடம் முறையிட முடியும்- வவுனியா அரச அதிபர்

அரசாங்கத்தால் கொரோனா இடர்கால கொடுப்பனவாக வழங்கப்படும் 5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு கிடைக்காதவர்கள் தமது பிரிவு பிரதேச செயலாளரிடம் மேன்முறையீடு செய்ய முடியும் என மாவட்ட அரசாங்க அதிபர் சமன் பந்துலசேன தெரிவித்துள்ளார்.

வவுனியா மாவட்டத்தின் தற்போதைய நிலைமைகள் மற்றும் கொவிட் -19 தாக்கம் குறித்து நேற்று (புதன்கிழமை) மாலை இடம்பெற்ற விசேட கூட்டத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் கூறுகையில், “கொரோனா தொற்று இடர்கால நிவாரணங்கள் பல்வேறு முறைகளில் முன்னெடுக்கப்பட்டுள்ளன. சமுர்த்தித் திட்டத்தின் கீழ் சகன பியவர கடன் திட்டம் 9 ஆயிரத்து 119 குடும்பங்களுக்கும், அருணலு திட்டம் 14 ஆயிரத்து 687 குடும்பங்களுக்கும், காத்திருப்போர் பட்டியலில் 7 ஆயிரத்து 457 குடும்பங்களுக்கும், தினசரி உழைப்போர் மற்றும் வருமானம் இழந்த 8 ஆயிரத்து 541 குடும்பங்களுக்கும், மேன்முறையீட்டின் அடிப்படையில் ஆயிரத்து 777 குடும்பங்களுக்கும் என 41 ஆயிரத்து 581 குடும்பங்களுக்கு கொடுப்பனவாக மொத்தம் 207.905 மில்லியன் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன் 13.136 மில்லியன் ரூபாய் பெறுமதியான அவசரகால நிவாரண உதவிகள் 13 ஆயிரத்து 820 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. முதியோர் கொடுப்பனவு, சிறுநீரக நோயாளர் கொடுப்பனவு, மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்ட சமூக நலன்புரிக் கொடுப்பனவுகளாக 10 ஆயிரத்து 255 குடும்பங்களுக்கு 51.47 மில்லியன் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன், சமனங்குளம், பூவரசங்குளம், சன்னாசிப் பரந்தன், ஆனந்தர் புளியங்குளம், ஆசிகுளம், வெடிவைத்தகல்லு, கள்ளிக்குளம், இளமருதங்குளம் உள்ளிட்ட 62 கிராமங்களில் இருந்து கிடைத்த முறைப்பாடுகள் தீர்த்து வைக்கப்பட்டுள்ளன.

அத்துடன் 5000 ரூபாய் இடர்கால கொடுப்பனவு கிடைக்கவில்லை என்ற முறைப்பாடுகள் இருப்பின் பிரதேச செயலாளரிடம் மேன்முறையீடு செய்ய முடியும்” என அவர் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.