இனவாதிகளை இயக்குகின்ற ராஜபக்சக்கள் நினைத்தால் தீர்வு கிடைப்பது உறுதியே! – எனினும் வாக்குறுதிகள் எதுவும் நிறைவேறாது என்கிறார் சஜித்

“நல்லாட்சி அரசில் அரசியல் தீர்வுக்கான புதிய அரசமைப்பு மற்றும் அரசியல் கைதிகள் விடுதலை ஆகிய விவகாரங்களைக் குழப்பியடித்தவர்கள் ராஜபக்ச அணியினரேயாவர். அவர்கள்தான் இனவாதிகளையும் இயக்கி தீர்வு விடயங்களுக்கு எதிராக வெளியில் ஆர்ப்பாட்டங்களை நடத்தச் செய்தார்கள். எனவே, ராஜபக்சக்கள் நினைத்தால் தமிழர்களின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வை வழங்க முடியும். ஆனால், ராஜபக்சவினர் இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு வெறும் வாக்குறுதிகளைத்தான் வழங்குவார்கள். அதனை ஒருபோதும் அவர்கள் நிறைவேற்றவே மாட்டார்கள். இது கடந்த கால வரலாறு. இனியும் அவ்வாறுதான் நடக்கும்.”

– இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது:-

“அலரி மாளிகைக் கூட்டத்தில் கலந்துகொண்ட இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நன்றி செலுத்தும் வகையில் அவர்களை தனது வீட்டுக்கு அழைத்த பிரதமர் மஹிந்த ராஜபக்ச, அரசியல் கைதிகள் விடயம், காணி விடுவிப்பு, புதிய அரசமைப்பு மற்றும் தமிழ் மக்களின் அன்றாடப் பிரச்சினைகள் தொடர்பில் பல வாக்குறுதிகளையும் வழங்கியுள்ளார்.

இந்த வாக்குறுதிகள் அனைத்தையும் நாடாளுமன்றத்தில் ராஜபக்ச அரசு மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அதை மறந்தேவிடும். தமிழர்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் எதனையும் ராஜபக்சக்கள் நிறைவேற்றியதாக வராலறு இல்லை.

ஆனால், நல்லாட்சி அரசின் காலத்தில் நாம் அரசியல் தீர்வு விடயம், அரசியல் கைதிகளை முழுமையாக விடுவித்தல் ஆகிய இரண்டு பிரச்சினைகளையும் தவிர்த்து தமிழ் மக்களின் ஏனைய பிரச்சினைகளைத் தீர்த்துவைத்தோம். படையினர் வசமிருந்த பெருமளவிலான காணிகளை விடுத்தோம். ராஜபக்சவினரும் இனவாதிகளும் குழப்பியடிக்காவிட்டிருந்தால் புதிய அரசமைப்பு நிறைவேறியிருக்கும். அரசியல் கைதிகள் அனைவரும் சிறைகளிலிருந்து வெளியே வந்திருப்பார்கள்.

எனினும், ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான எமது கூட்டணி நாடாளுமன்றத்தில் ஆட்சிக்கு வந்தால் கடந்தகால அனுபவங்களைக் கருத்தில்கொண்டு இனவாதிகளினதும் ராஜபக்சக்களினதும் வாய்களுக்குப் பூட்டுப்போடுவோம். மூவின மக்களின் பிரச்சினைகளையும் தீர்த்து வைப்போம். சமரவுரிமையிலான தீர்வை வழங்கிவைப்போம்” – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.