பொதுத்தேர்தலை ஜூன் 20ஆம் திகதி நடத்துவது சாத்தியமில்லை – ரோஹன ஹெட்டியராச்சி

பொதுத்தேர்தலை எதிர்வரும் ஜூன் 20ஆம் திகதி நடத்துவது சாத்தியமில்லை என பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியராச்சி தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 20ஆம் திகதி தேர்தலை நடத்துவது தேர்தல் ஆணையகத்திற்கு மிகவும் கடினமான விடயமாக அமையப்போகின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜூன் 20ஆம் திகதி தேர்தல் ஒத்திவைக்கப்பட்டாலும் அடுத்த தேர்தலையும் கொரோனா அச்சத்திற்கு மத்தியிலேயே நடத்தவேண்டியிருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

2020 இறுதிக்குள் கொரோனா வைரஸ் முற்றாக இல்லாமல் போய்விடும் என மக்கள் கருதக்கூடாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சுகாதார நெருக்கடி எப்போது முடிவிற்கு வரும் என்பதை யாராலும் எதிர்வுகூறமுடியாது என தெரிவித்துள்ள ரோஹன ஹெட்டியராச்சி,  பொதுத்தேர்தல் தொடர்பில் பிரதான கட்சிகள் இணக்கப்பாட்டிற்கு வரவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

அரசியல் கட்சிகள் இந்த விவகாரத்திற்கு யதார்த்தபூர்வமான தீர்வை காணமுயலவேண்டும், இந்த விவகாரத்திற்கு தீர்வை காண்பதற்கான முயற்சிகளிற்கு தேர்தல் ஆணையகம் தலைமை தாங்கவேண்டும் எனவும் ரோஹன ஹெட்டியராச்சி தெரிவித்துள்ளார்.

பெருமளவு மக்கள் கூடுவது சாத்தியமில்லை, இதன் காரணமாக தங்கள் கட்சியின் கொள்கைகளின் அடிப்படையில் பிரச்சாரங்களை மேற்கொள்வதற்கு அரசியல் கட்சிகள் மாற்றுவழிமுறைகள் குறித்து சிந்திக்கவேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். வழமையான பிரச்சார முறைகள் இம்முறை இடம்பெறாது என அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.