த.தே.கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தை செயற்படுத்தவிடாமல் முட்டுக்கட்டை போட்டது சுமந்திரனே- சுரேஷ்
வட மாகாணசபைத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பால் முன்வைக்கப்பட்ட தேர்தல் விஞ்ஞாபனத்தை செயற்படுத்தவிடாமல் முட்டுக்கட்டை போட்டது சுமந்திரன் என ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
சம்பந்தர், விக்னேஸ்வரனை நம்பி ஏமாந்துள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனால் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துக்கு அறிக்கை ஒன்றின் மூலம் பதிலளித்துள்ள அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
குறித்த அறிக்கையில் கருத்து தெரிவித்துள்ள அவர், “அண்மையில் வட மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஒரு கேள்விக்குப் பதிலளிக்கையில் திரு.சம்பந்தன் முன்னைய அரசாங்கத்தை நம்பிக்கெட்டார் என்றும் அவ்வாறான விடயங்கள் தமிழ் மக்களுக்கும் தமிழ் அரசியல் கட்சிகளுக்கும் படிப்பினையாக இருக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.
இந்நிலையில் சம்பந்தன்தான் விக்னேஸ்வரனை நம்பிக்கெட்டார் என்றும் விக்னேஸ்வரன் திரு.சம்பந்தனுக்குக் கொடுத்த பல உறுதிமொழிகளை அவர் காப்பாற்றவில்லை என திரு. சுமந்திரன் கூறியிருப்பதுடன் அரசாங்கத்துடன் தாம் நடத்திய பேச்சுவார்த்தைகளை நியாயப்படுத்தியும் அவரது பதில் அமைந்திருந்தது.
விக்னேஸ்வரன் அவர்களின் கூற்றில் என்ன தவறு இருக்கின்றது? இலங்கை சுதந்திரம் அடைந்த காலத்திலிருந்து ஒவ்வொரு நாடாளுமன்றத்திலும், புதிய அரசியல் சாசனங்கள் வருகின்றபோதும் தமிழ் மக்கள் முழுமையாக ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள் என்பது இந்நாட்டின் அரசியல் வரலாறு.
அதைப்போலவே, விடுதலைப் போராட்டம் மௌனிக்கச் செய்யப்பட்டதன் பின்னர், மகிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்திலும், நல்லாட்சி அரசாங்கத்திலும் தமிழ் தலைமைகள் ஏமாற்றப்பட்டிருக்கின்றன என்பதை ஏற்றுக்கொள்வதற்கு கூச்சப்படவேண்டிய தேவை என்ன?
கடந்த நல்லாட்சி அரசாங்கம் கலைக்கப்பட்டதற்குப் பின்னர், தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா நல்லாட்சி அரசாங்கம் தங்களை ஏமாற்றிவிட்டதாக ஊடகங்களில் தெரிவித்திருந்தார்.
இதனைக்கூட திரு.சுமந்திரன் கவனத்தில் கொள்ளாமல் கடந்த அரசாங்கம் தங்களை ஏமாற்றவில்லை என்ற பாணியிலும் முன்னாள் முதல்வர் விக்னேஸ்வரன்தான் தங்களை ஏமாற்றியவர் என்றும் சொல்வதானது நகைப்புக்குரிய விடயமாகும்.
விக்னேஸ்வரன் வடக்கு மாகாண முதல்வராகியபொழுது அத்தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு முன்வைத்த தேர்தல் விஞ்ஞாபனத்தை நடைமுறைப்படுத்துவதற்கு சம்பந்தன், சுமந்திரன் போன்றோர் முட்டுக்கட்டையாக இருந்தார்கள் என்பதுதான் உண்மை. எந்தவொரு அரசியல் தீர்மானத்தை எடுப்பதற்கும் இவர்கள் தொடர்ச்சியாக முட்டுக்கட்டையாக இருந்தனர்.
இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக இனப்படுகொலை ஒன்று நடந்தது என்ற தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கு முதலமைச்சர் பலமுறை முயற்சித்தபோதும் இவர்களின் தலையீட்டினால் அது தள்ளிக்கொண்டேபோனது. பின்னர், சபை அங்கத்தவர்கள் அனைவரின் ஆதரவுடன் அது நிறைவேற்றப்பட்டது.
அதுமட்டுமல்லாமல், தமிழரசுக் கட்சியினரே முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தைக் கொண்டுவந்திருந்தனர். ஆகவே யார் யாரை ஏமாற்றினார்கள் என்பதை திரு.சுமந்திரன் புரிந்துகொள்ள வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
கருத்துக்களேதுமில்லை