“அதிகார அரசியல்வாதிகளுக்கு புதுவகை வைரஸ்; அறுதிப் பெரும்பான்மையென்ற குலை நடுக்கம்” என்கிறார் அஷாத் சாலி!
அதிகார அரசியல்வாதிகளுக்கு புதுவகையான தேர்தல் வைரஸ் தொற்றியுள்ளதால் கொரோனா வைரஸின் தாக்கத்தை அவர்கள் பெரிதாக பொருட்படுத்துவதாகவோ கணக்கெடுப்பதாகவோ தெரியவில்லை என்று முன்னாள் மேல் மாகாண ஆளுநரும் தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவருமான அஷாத் சாலி தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியுள்ளதாவது
“பொதுத்தேர்தலில் தாம் வெற்றிபெற வேண்டும். அதுவும் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெற்றிட வேண்டும் என்பதில் கச்சிதமாகக் காய் நகர்த்தும் இவர்கள் பெரும்பான்மை சிங்கள வாக்குகளை குறிவைத்து முஸ்லிம்கள் மீது வஞ்சம் தீர்த்து வருகின்றார்கள். முஸ்லிம் ஜனாசாக்களை எரித்துத்தான் ஆக வேண்டுமென அடம்பிடித்து அதனை சரியாகச் செய்து வரும் இந்த சதிகாரக் கூட்டம் கொரோனா பிடிக்காத மட்டக்குளி பாத்திமாவையும் வேண்டுமென்றே எரித்துச் சாம்பராக்கி விட்டார்கள். தகனக் கிரியைகளில் பாத்திமாவின் கணவர் உட்பட குடும்பத்தினர் பங்கேற்பதை தடுத்து அவர்களை இழுத்துக்கொண்டு தனிமைப்படுத்தல் முகாமுக்குச் சென்ற கொடூரத்தை நாம் பார்க்கின்றோம். கொழும்பில் வேறு நோயின் காரணமாக மரணமான றபாய்தீன் என்ற இளைஞரைக் கூட கொரோனா பந்தயத்தில் அடக்கவிடாமல் சதி செய்தனர்.
தற்போது மருத்துவ ஆய்வுகூட உயரதிகாரி ஒருவரின் தகவலின்படி 13 பேரினது கொரோனா பரிசோதனை அறிக்கைகள் பிழையானது எனவும் அதாவது இவர்களுக்கு கொரோனா இல்லையென்று தெட்டத்தெளிவாக பகிரங்கமாகக் கூறியுள்ளார். இதற்கெல்லாம் உலக சுகாதார ஸ்தாபனத்தின் துணை தலைவராக பதவியைப் பொறுப்பேற்கவுள்ள டாக்டர்.அணில் ஜயசிங்க பதில் கூற வேண்டும்.
சுகாதார அதிகாரிகள் மற்றும் சட்ட வைத்திய அதிகாரிகள் கூறுவதையும்இ எடுத்த முடிவுகளையுமே நடைமுறைப்படுத்துவதாக கூறும் அரசாங்கம் எப்போதாவது அதிகாரிகளுக்கு அடங்கி நடந்திருக்கின்றதா? முஸ்லிம்களின் எரிப்பு விடயத்தில் மட்டும் JMO தனியான ஆட்சி நடத்துவது போன்று முடிவெடுப்பதற்கு பின்புலம் என்ன? ராஜபக்ஷக்கள் அதிகாரமிழக்கும் போது இதற்கான உண்மைகள் வெளிவரும். இந்த அதிகாரிகள் அப்போது எரிப்பு விடயத்தில் பதில் கூறியே ஆகவேண்டும்.
முஸ்லிம்களை பலிகொடுத்து அரசியல் பிழைப்பு நடத்துவதே இவர்களின் கேவலமாகிவிட்டது. தேர்தலுக்கு இவர்கள் அவசரப்படுவதன் நோக்கம் நாட்கள் கழியக்கழிய தற்போதைய அரசின் வண்டவாளங்கள் அம்பலத்துக்கு வந்து மக்கள் மத்தியில் மதிப்பிழந்து வாக்குகள் குறையும் என்ற அச்சமேயாகும்” இவ்வாறு அவர் கூறினார்.
கருத்துக்களேதுமில்லை