திட்டமிடலொன்று இல்லாமல் ஊரடங்களை தளர்த்துவதானது பாரிய சிக்கலை ஏற்படுத்தும் – அஜித் பி. பெரேரா

முறையான திட்டமிடலொன்று இல்லாமல் எதிர்வரும் 11 ஆம் திகதி நாடளாவிய ரீதியாக ஊரடங்களை தளர்த்துவதானது, மக்களுக்கு பாரிய சிக்கலை ஏற்படுத்தும் என ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா தெரிவித்தார்.

கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், ஊரடங்கைத் தளர்த்தும்போது சரியான திட்டமிடல் அவசியம் என்றும் சுட்டிக்காட்டினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “எதிர்வரும் திங்கட்கிழமை ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உண்மையில், நாட்டை இவ்வாறான நிலைமையில் வைத்துக் கொண்டிருக்க முடியாது. ஆனால், ஊரடங்கைத் தளர்த்தும்போது சரியான திட்டமிடலொன்று அவசியமாகும்.

உலக நாடுகள் சில சரியான திட்டமிடலுடன்தான் ஊரடங்கை தளர்த்தியது. கொரோனா வைரஸ் நிலவரம் தொடர்பாக தீவிரமாக ஆராய்ந்தே முடிவுகளை எடுத்தது. ஆனால், துரதிஷ்டவசமாக எமது அரசாங்கம் அவ்வாறான திட்டமிடல்களை மேற்கொள்ளவில்லை.

அரசாங்கத்தின் நடவடிக்கைகள் ஒவ்வொன்றிலும் தேர்தல் இலக்குத்தான் காணப்படுகிறது.
இலங்கையின் பொருளாதாரம் கடந்தாண்டு நவம்பரில் இருந்து வீழ்ச்சியடைந்துள்ளது. இந்த நிலையில், அரசாங்கம் அரசியல் நோக்கங்களை விடுத்து, நேர்மையான மக்கள் சேவைக்கு முன்வர வேண்டும்.

இதனைத் தான் நாட்டு மக்களும் விரும்புகிறார்கள். அரசாங்கத்தின் திட்டங்கள் நாளுக்கு நாள் மாற்றமடைகின்றன. முதலில் ஒரு வர்த்தமாணி வெளிவருகிறது. பின்னர் அந்த வர்த்தமாணிக்கு எதிரான ஒரு முடிவு எடுக்கப்படுகிறது.

இங்கு ஒரு தீர்க்கமான கொள்கையொன்றும் கிடையாது. அரச- தனியார் தரப்பினர் என அனைவரும் இன்று இதனால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதனை அரசாங்கம் கைவிட வேண்டும் என நாம் கேட்டுக் கொள்கிறோம்.

அப்படி அரசாங்கம் மக்களுக்காக பணியாற்ற முன்வருமாக இருந்தால், நிச்சயமாக நாம் எமது ஆதரவினை அரசாங்கத்துக்கு வழங்குவோம்.” என கூறினார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.