இரண்டு மாதங்களின் பின்னர் வழமைக்குத் திரும்பும் யாழ்ப்பாணம்!

யாழ்ப்பாணம் எதிர்வரும் திங்கட்கிழமையிலிருந்து வழமைக்குத் திரும்பும் என யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாண நகரை வழமையான செயற்பாட்டுக்கு உட்படுத்துவது தொடர்பான விசேட கூட்டம் யாழ். மாவட்டச் செயலகத்தில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்றது. இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அரசாங்க அதிபர் இதனைக் குறிப்பிட்டார்.

அவர் கூறுகையில், “கடந்த இரண்டு மாதங்களின் பின்னர் எதிர்வரும் திங்கட்கிழமையிலிருந்து யாழ். மாவட்டம் மீண்டும் வழமைக்குத் திரும்பவுள்ளது. அனைத்து செயற்பாடுகளும் வழமைபோன்று இடம்பெறும்.

எனினும், சுகாதாரத் துறையினரின் அறிவுறுத்தலுக்கு அமைய பொதுப் போக்குவரத்து, வர்த்தகர்கள், சிகை அலங்கரிப்பாளர்கள், உணவக உரிமையாளர்கள் சுகாதார நடைமுறையை பின்பற்றி பொது மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத வண்ணம் தமது அன்றாட செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும்.

யாழ். மாவட்டமானது வழமைக்குத் திரும்புகின்ற போதிலும் கொரோனா தொற்று அபாயம் இன்னும் நீங்கி விடவில்லை. எனவே மக்கள் இவ்விடயத்தில் அவதானமாகச் செயற்பட்டு அநாவசியமாக வீடுகளிலிருந்து வெளியே வரவேண்டாம் என்பதோடு மக்கள் தமது தேவைகள் முடிந்த பின்னர் வீடுகளில் இருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்ள முன்வர வேண்டும்” என அரசாங்க அதிபர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.