மாவையின் சிறந்த மதிநுட்பம்: புத்தெழுச்சி பெறும் தமிழ் தேசிய கூட்டமைப்பு!

மழுங்கடிக்கப்பட்டுள்ள தமிழர்களின் அரசியல் பேரம் பேசும் சக்தி மீண்டும் ஒரு அத்தியாயத்திற்குள் நுழைவதாகவே அண்மைக்கால அரசியல் நகர்வுகள் புடம்போட்டுக் காட்டுகின்றன என ராக்கி எழுதிய கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

அவர் தனது கட்டுரையில் மேலும்,

ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டு 11 ஆண்டுகளை தொட்டு நிற்கும் இக்காலகட்டத்தில், இன்னமும் தமிழர்களின் அரசியல் நகர்வுகள் வெறும் வாய் வார்த்தைகளோடு நின்று கொண்டிருப்பது வேதனைக்குரியது தான்.

அதிலும் தமிழ் அரசியல் தலைமைகளின் மீது தமிழ் மக்கள் கொண்டிருந்த ஒட்டுமொத்த நம்பிக்கையையும் உடைத்தெறிந்த சம்பவங்களையும் கண்டுகொள்ள முடிந்தது.
தென்னிலங்கையில் அதிகாரப் பீடம் மாறினாலும், ஆட்சியாளர்கள் எடுக்கும் முடிவுகளை கூட தமிழ் தலைமைகள் சரியான விதத்தில் தமிழர் நலனுக்காக கையாள முயற்சிக்கவில்லை அல்லது சரியான பேரம் பேசலை, சரியான நேரத்தில் எடுக்கவில்லை என்கிற குற்றச்சாட்டுக்கள் அடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

கடந்த ஆட்சியின் போது ரணில் தலைமையிலான அரசாங்கத்தை காப்பாற்றும் செயல்பாட்டைத் தவிர வேறு எதனையும் தமிழ் தேசிய கூட்டமைப்பு செய்யவில்லை என்கிற ஆதங்கமும் கோபமும் தமிழ் மக்களிடத்திலும், அக்கட்சியின் தொண்டர்களிடையேயும் உண்டு என்பதை மறுப்பதற்கில்லை.

இந்த நிலையில், கடந்த ஆண்டு இறுதியில் ஸ்ரீலங்காவில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் பின்னர் மீண்டும் தமிழ் தலைமைகள் என்ன முடிவு எடுக்கப் போகின்றன என்கிற கேள்விகளும் தாராளமாக எழுப்பப்பட்டன.

இதற்கிடையில் தற்போது நாட்டில் ஏற்பட்டிருக்கும் நெருக்கடியான சூழ்நிலையில் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினையும் முழுமையாக கிடப்பில் போடப்பட்டிருக்கின்றன.
அதேபோன்று, கொரோனா நெருக்கடியின் போது வாழ்வாதாரத்தை இழந்து பல குடும்பங்கள் கடும் நெருக்கடிக்குள் சிக்கியிருக்கின்றன.

இந்நிலையில் மீண்டும் நாடாளுமன்றத்தை கூட்டுமாறு ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் எதிர்கட்சிகள் அழுத்தம் கொடுத்துக் கொண்டிருக்கும் நிலையில், பிரதமர் தலைமையில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான கலந்துரையாடல் நடைபெற்று இருக்கிறது.
இக்கலந்துரையாடலில் பிரதான எதிர் கட்சிகளான ஐக்கிய தேசிய கட்சி, மக்கள் விடுதலை முன்னணி, தமிழ் முற்போக்கு கூட்டணி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளிட்ட பெரும்பாலான கட்சிகள் இந்த கூட்டத்தை புறக்கணித்திருந்தன.
முன்னதாக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான கட்சியினர் கலந்து கொள்வதாகவே தகவல் வெளியிட்டிருந்தனர். எனினும் திமரென்று அந்த நிலைப்பாட்டிலிருந்து அக்கட்சியினர் பின்வாங்கினர். ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்பு பிரதமருடனான சந்திப்பை மேற்கொண்டது.

எனினும், ஐக்கிய தேசிய கட்சியும், ரணில் தரப்பும் பங்குபற்றாத கூட்டத்தை புறக்கணிப்பும் முடிவில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் சுமந்திரன் இருந்ததாக கூறப்படுகிறது.
பிரதமருடனான சந்திப்பிலிருந்து கூட்டமைப்பு விலக வேண்டும் என்பதில் சுமந்திரன் உறுதியாக இருந்ததாக அக்கட்சியின் உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையில், சுமந்திரன் கட்சியின் தலைமைப் பதவியினை இலக்கு வைத்திருப்பதும், அதனை கைப்பற்றுவதிலும் குறியாக இருந்ததாக கூறப்படுகிறது.
ஆனால், இது அடிமட்டத் தொண்டர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியிருந்ததோடு, விமர்சனத்திற்கும் உள்ளாக்கப்பட்டது.

பிரதமர் மகிந்த ராஜபக்சவுடனான கூட்டமைப்பின் சந்திப்பினை ஊடகப் பேச்சாளர் சுமந்திரன் கடைசி நேரம் வரை தடுத்து நிறுத்துவதில் உறுதியாக இருந்ததாக தமிழரசுக் கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன. அன்றைய கட்சிக்கூட்டத்தில் கூட சுமந்திரன் கலந்து கொள்ளவில்லை என்கின்றன தகவல்கள்.

குறிப்பாக பிரதமருடனான சந்திப்பானது கூட்டமைப்பின் அரசியல் நகர்விற்கு குந்தகம் விளைவிற்கும் செயல்பாடாக மாறும் என்று சுமந்திரன் வலியுறுத்திக் கொண்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.

எனினும் இந்த நிலைப்பாட்டினை ஆவோசித்த கூட்டமைப்பின் தலைவர் இராஜவரோதயம் சம்பந்தனும், தமிழரசுக் கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராஜாவும், நீண்ட அரசியல் ஆலோசனையின் பின்னர் பிரதமருடனான சந்திப்பில் கலந்து கொள்வது என்கிற முடிவினை எடுத்ததாக கூறப்படுகிறது.

தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவின் ஆளுமை நீண்ட நாட்களிற்குப் பின் மிக தெளிவாக தென்பட்டுள்ளமை சம்பந்தனின் உடன்பாட்டிற்கு காரணமாக அமைந்துள்ளது.
இதற்கிடையில், தமிழ் தேசிய அரசியலை இல்லாதொழிக்கும் செயல்பாடுகளும் திரைமறையில் செய்யப்படுவதனையும் தொண்டர்கள் கடுமையாக விமர்சிக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.
முக்கியமாக விருந்தாளிப் போக்கில் கட்சிக்குள் நுழைந்து கொண்டவர்கள், தமிழ் தேசிய அரசியலிற்கு எதிர் மறை சிந்தனை உள்ளவர்களை கட்சிக்குள் நுளைத்து உரிமைக்கான கட்சி எனும் அடையாளத்தை அகற்றி தற்போதைய சூழலில் கட்சியின் தலைமையைக் கைப்பற்றிக் கொள்ள நினைப்பது தமிழர் அரசியலுக்கு ஆரோக்கியமற்றது என்பதை உறுப்பினர்கள் எதிர்க்கத் தொடங்கியிருக்கிறார்கள்.

தமிழ் தேசிய அரசியலை முன்னெடுக்கத் தெரியாதவர்களை அல்லது தமிழ் தேசிய அரசியலை முற்றாக எதிர்க்கும் விருந்தாளிகளை உள்ளே கொண்டுவருவதன் மூலமாக தமிழரின் தேசிய நோக்கத்தினை மழுங்கடித்து. தமிழர் அரசியல் மரபினை இல்லாது செய்யும் செயல்பாடுகளை ஏற்க மறுக்கிறார்கள் கட்சி நலன்விரும்பிகளும் தமிழர்களும்,
உண்மையில், இதன் தார்ப்பரியம் யாது என்பதை கட்சியின் வழிகாட்டல் குழுவும், தொண்டர்களும் சரியான நேரத்தில் விளங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
இது தொடர்பில் தமிழரசுக் கட்சியின் தலைமை சரியான நிலைப்பாட்டினை எடுக்கத் தவறுமாயின் நிலைமை மோசமானதாக மாறுவதுடன், தமிழரின் அரசியல் நகர்வு தடம்மாறும் சூழலுக்குள் தள்ளப்படும்.

இந்த சூழ்நிலையில், கடந்த ஆட்சியின் போது நடந்த சில அரசியல் நகர்வுகள் தொடர்பிலும், பின்னடைவுகள் குறித்தும் தலைவர் சம்பந்தனிடமும், தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவுடனும் கட்சியின் தொண்டர்கள் நீண்ட பேச்சுவார்த்தைகளுடன் அழுத்தங்களையும் கொடுத்ததாக உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன.

இதுவொருபுறமிருக்க, அண்மையில் பிரதமருடனான சந்திப்பில் கட்சியின் தலைவராக மாவை சேனாதிராஜா எடுத்த உறுதியான முடிவினை கட்சியின் தொண்டர்கள் வரவேற்கத் தொடங்கியிருக்கிறார்கள்.

ஏனெனில், விடுதலைப் போராட்டத்துடனும், அரசியலிலும் மாவை சேனாதிராஜாவுக்கு இருக்கும் நேரடி நீண்ட அனுபவமும், தொண்டர்களுடன் அவருக்கு இருக்கும் பிணைப்பும் தமிழர் அரசியல் வரலாற்றில் மறுக்கமுடியாத பக்கங்களாக அமைகின்றன. அதுமட்டுமன்றி தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளிடையே மாவைக்கு இருக்கும் ஆதரவையும் இங்கே சுட்டிக்காட்ட வேண்டும்.

ஏனெனில் அரசியல் ஆழம் அவருக்கு நன்கு தெரியும். இருப்பினும் கடந்த சில ஆண்டுகளாக மாவை சேனாதிராஜா காட்டிய தயக்கமும், பின்னடிப்பும் பல்வேறு தொய்வு நிலையினை ஏற்படுத்தியிருந்தது.

அதுமட்டுமல்லாது அவர் மீது நம்பிக்கை வைத்திருந்த தொண்டர்களுக்கும் அவரின் செயல்பாடுகள் மீது கடும் அதிருப்தி ஏற்பட்டிருந்தது.

இச்சூழலில் தான் பிரதமர் மகிந்த ராஜபக்சவுடனான சந்திப்பில் மாவை எடுத்திருக்கும் உறுதியான நிலைப்பாட்டினை தமிழரசுக் கட்சியின் தொண்டர்கள் வரவேற்கிறார்கள் மகிந்தவை சந்தித்தது என்பதற்காக அல்ல மாவை சேனாதிராஜா தனித்துவமாக எடுத்த முடிவே இதற்கு காரணம்.

மகிந்தவின் சந்திப்பு அரசியலில் ஒரு சாதாரண விடயம் காரணம் கடந்த காலங்களில் ஐக்கிய தேசிய கட்சியின் பங்காளிக் கட்சி எனும் பார்வை வடக்கு – கிழக்கு உட்பட தென்னிலங்கையிலும் பரவலாக இருந்தது அந்த நிலை தற்போது மாற்றமடைந்து தென்னிலங்கையில் யார் இருந்தாலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மக்கள் சார்ந்த விடயங்களில் பேசும் என்பதற்கு சிறந்த உதாரணம்.
கடந்த காலங்களில் தமிழர்களிற்கு இழைக்கப்பட்ட அநீதிகள் திட்டமிட்டு மழுங்கடிக்கப் பட்டது போல் இனி வருங் காலங்ளிலும் மறைக்கப் படாது மிக ஆளுமையான அணியை உருவாக்கும் முயற்சியிலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் புத்திஜீவிகள் குழாம் முனைப்பு காட்ட ஆரம்பித்துள்ளனர்.

இப்படியாக தனிநபர் கட்டுப்பாட்டில் இருந்த தமிழ் தேசியக்கூட்டமைப்பு மக்கள் கட்சியாக மக்களின் உரிமை மற்றும் அபிவிருத்தியில் காத்திரமான முடிவுகளை எடுக்கும் கட்சியாக விரைவாக மாற வேண்டிய கட்டாயம் உள்ளது.

தமிழர் அரசியல் விழிப்படைய வேண்டும், அடுத்தகட்ட நகர்வுகளை நோக்கி பாய வேண்டும் என்பதில் அனைத்து தமிழர்களும் ஆர்வமாக இருக்கிறார்கள்.

அதற்கு சரியான தலைமையும், உரிய நேரத்தில் எடுக்கப்படும் முடிவுகளும், களத்திற்கு ஏற்றால் போல் ஏற்படும் வேகமும், வீரியமும் தான் தற்போது தேவை என்கிற சூழலில் மாவையின் தற்போதைய மதிநுட்பம் தமிழர் அரசியலுக்கு கட்டாயமானதாக தேவைப்படுகிறது என்கிறார்கள் தொண்டர்கள்.

கட்சியின் தலைமைப் பதவிக்கும், தான் சார்புடைய ஆட்சியாளர்களைக் காப்பாற்றுவதற்காக தமிழர்களின் வாக்குப் பலத்தை பயன்படுத்தும் ஒருசில சுயநல அரசியல்வாதிகளிடமிருந்து தமிழர் அரசியலை மீட்டு புதிய பாதையில் பயணிப்பதற்கு தமிழரசுக் கட்சியும், அதன் தலைமையும் மதிநுட்பத்துடனும், வீரியத்துடனும் செயல்பட வேண்டும் என்று அக்கட்சியின் உள்ள தரப்பிலிருக்கும் தொண்டர்கள் அங்கலாக்கிறார்கள் என குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.