அலுவலகப் பணியாளர்களுக்கான சுகாதாரத் துறையின் அறிவுறுத்தல்

ஊரடங்கு தளர்வு காரணமாக அலுவலகங்கள் வழமைபோன்று இயங்கவுள்ள நிலையில், பணியாளர்கள் எவ்வாறான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவக் கலாநிதி ஆ.கேதீஸ்வரன் அறிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் அனுப்பி வைத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

1) பணியாளர்கள், பொதுமக்கள் தம்மை கொரோனா தொற்றிலிருந்து பாதுகாப்பதற்குரிய வழிகாட்டுதல்களை அலுவலக வாயிலில் காட்சிப்படுத்துதல் வேண்டும்.

2) வேலைத் தளத்தினுள் நுழைவதற்கு முன் பணியாளர்கள், வாடிக்கையாளர்கள் கைகளைச் சரியான முறையில் சவர்க்காரமிட்டுக் கழுவ அல்லது தொற்று நீக்கியைப் பாவித்து தூய்மைப்படுத்தவதைக் கட்டாயமாக்கவும்.

3) இதற்காக அலுவலகத்தின் நுழைவாயிலிலும், பொருத்தமான ஏனைய இடங்களிலும் கை கழுவும் வசதியை ஏற்படுத்திக் கொடுத்தல் வேண்டும் அல்லது தொற்று நீக்கிப் பாவனையை உறுதி செய்தல் வேண்டும்.

4) அலுவலகத்தின் அனைத்துப் பகுதிகளையும் தூய்மையாக பேணுவதுடன்; அலுவலகத்தில் மக்கள் அதிகளவில் ஒன்றுகூடும் பொதுப் பயன்பாட்டிடங்கள் மற்றும் தளபாடங்கள், கதவுக் கைபிடிகள், படிக் கைபிடிகள், இலத்திரனியல் உபகரணங்களை பொருத்தமான தொற்று நீக்கியை பாவித்து கிரமமாக அடிக்கடி தூய்மைப்படுத்தலும் வேண்டும்.

5) கூடுமானவரை அலுவலகத்தின் கதவுகள், ஜன்னல்களை திறந்து வைத்திருக்கவும்.

6) குளிரூட்டிகள் மற்றும் வளிச் சீராக்கிகள் வேலைத்தளங்களில் உள்ளகங்களில் பாவிப்பது தடை செய்யப்பட வேண்டும்.

7) சேவை வழங்கும் இடங்களில் சேவை பெறுநர்களின் எண்ணிக்கையை அலுவலகத்தின் உள்ளேயும், வெளியிலும் மட்டுப்படுத்துவதுடன் அலுவலகப் பணியாளர்கள், சேவை பெறுனர்களுக்கிடையில் ஆகக் குறைந்தது 3 அடி இடைவெளி கட்டாயமாக்கப்பட வேண்டும்.

8) கடமை நேரத்தில் உத்தியோகத்தர்கள் சரியான முறையில் முகக்கவசம் அணிந்து கடமையாற்றுவதை உறுதிப்படுத்துதல் வேண்டும்.

9) பணியிடங்களில் ஒன்றுகூடல்களின்போது முக்கியமான அங்கத்தவர்கள் மாத்திரம் பங்குபற்றுவதையும் போதிய தனிநபர் இடைவெளியையும் உறுதிப்படுத்தல் வேண்டும். ஒன்றுகூடலின் பின் குறித்த பகுதி உடனடியாக தூய்மைப்படுத்தப்பட வேண்டும்.

10) ஒவ்வொரு சேவைகளையும் குறித்தொதுக்கப்பட்ட தினங்களிலும், நேரங்களிலும் திட்டமிட்டு நடைமுறைப்படுத்துவதுடன் பொருத்தமான ஊடகங்கள் வாயிலாக பொதுமக்களுக்கு அறிவுறுத்தி மக்கள் அதிகளவில் ஒன்று கூடுவதை தவிர்த்தல் வேண்டும்.

11) பணியாளர்கள் தமக்கு கொரோனா நோயின் அறிகுறிகளான காய்ச்சல், இருமல், மூச்செடுப்பதில் சிரமம், தொண்டைநோவு போன்ற அறிகுறிகள் சிறிதளவேனும் இருந்தால் கடமைக்கு சமூகமளிப்பதை தவிர்க்கும்படி அறிவுறுத்தவும் – என்றுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.