ரயில் சேவைகள் நாளை ஆரம்பம்!
ரயில் பயணிகளுக்கான அனைத்து சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன எனவும், அதற்கிணங்க நாளை 11ஆம் திகதி முதல் ரயில் சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன எனவும் ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்தநிலையில் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் உட்பிரவேசிக்கும் பயணிகளின் உஷ்ண நிலையைப் பரிசோதிக்கும் வகையில் 2 நவீன தொழில்நுட்ப டோமோ கமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
கமரா பொருத்தப்பட்டுள்ள வாயில் வழியே பயணிகள் உட்பிரவேசிக்க வேண்டும் என்றும், அதிகரித்த உஷ்ணத்துடன் காணப்படும் பயணிகளுக்கு உடனடியாக சுகாதார பாதுகாப்பு ஏற்பாடுகளின் கீழ் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் ரயில்வே மேலதிக பொது முகாமையாளர் டி.எஸ்.பொல்வத்தகே தெரிவித்தார்.
இதற்கு மேலதிகமாக கைகளினால் உஷ்ண நிலையை பரிசோதிக்கும் உபகரணங்கள் ரயில்வே பாதுகாப்பு அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில் கோட்டை ரயில் நிலையத்துக்கு டிஆர் விஜேவர்தன மாவத்தை ஊடாக பிரவேசிக்கும் பயணிகள் அதன் மூலம் பரிசோதிக்கப்படவுள்ளனர்.
அதற்கு மேலதிகமாக ரயில் நிலையத்திற்கு வரும் பயணிகள் கைகளை கழுவுவதற்கான வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன் பயணிகள் அனைவரும் முகக் கவசங்களை அணிந்து வரவேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
நேற்றுவரை அத்தியாவசிய சேவைகளுக்காக செல்லும் சுமார் 3 ஆயிரம் பயணிகள் பயணத்துக்காக விண்ணப்பித்துள்ளனர் எனவும் அவர் மேலும் கூறினார்.
கருத்துக்களேதுமில்லை