கட்சியில் இணைய மாகாணசபை வேட்பாளர் உத்தரவாதம் கோரினார் வெள்ளிமலை: கி.துரைராசசிங்கம்

திருவாளர் ஞானமுத்து கிருஸ்ணபிள்ளை தமிழரசுக் கட்சியில் இணைவதாயின் ஏற்கனவே இருந்த கட்சியில் இருந்து நீங்கியமை தொடர்பான கடிதத்தைப் பகிரங்கப்படுத்தச் சொன்னேன் அவர் செய்யவில்லை என்பதோடு அவர் கட்சியில் இணைவதாயின் மாகாணசபை வேட்பாளர் உத்தரவாதம் கோரப்பட்டபோது அதனை உரிய நேரத்தில் தான் தீர்மானிக்க முடியும் என்று தெரிவித்தேன். அதன் பின்னர் எமது கட்சியில் இணைவது தொடர்பில் அவர் எவ்வித அக்கறையும் கொள்ளவில்லை என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராசசிங்கம் தெரிவித்தார்.

முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ஞானமுத்து கிருஸ்ணபிள்ளை அவர்கள் தமிழரசுக் கட்சியில் இணைய முற்பட்டபோது கட்சியில் உள்வாங்க முடியாது என்று தெரிவித்ததாக அவாரால் வெளியிடப்பட்ட செய்தியொன்றுக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

திருவாளர் ஞானமுத்து கிருஸ்ணபிள்ளை அவர்கள் எங்களோடு மாகாணசபையில் உறுப்பனராக இருந்து, எங்களோடு இணைந்து செயற்பட்டவர். அவர் தமிழரசுக் கட்சியில் சேர்வதற்கு விருப்பம் தெரிவித்தார். அந்த நேரத்தில் தன்னுடைய பல ஆதரவாளர்களையும் சேர்க்க விரும்புவதாகவும், தன்னிடம் விண்ணப்பப்படிவம் தருமாறும் கேட்டுக் கொண்டார். இது பற்றி நான் கட்சி உறுப்பினர்களுடன் கலந்து பேசினேன். அவரைச் சேர்த்துக் கொள்வதில் பிரச்சினை இல்லை என்றும் ஆனால் அவர் தமிழர் விடுதலைக் கூட்டணியின் உபதலைவர்களுள் ஒருவராக இருப்பதனால் அந்தப் பதவியைத் துறந்து அதனைப் பகிரங்கப்படுத்துகின்ற தேவையுள்ளதென்றும் குறிப்பிட்டார்கள். எனவே நான் அவரை அழைத்து விண்ணபப்படிவங்களைக் கொடுத்ததோடு குறித்த தேவைப்பாட்டையும் விளக்கிக் கூறினேன். ஏற்றுக் கொண்ட அவர் தான் பதவியைத் துறப்பதாகத் தமிழர் விடுதலைக் கூட்டணி செயலாளர் நாயகத்திற்கு எழுதிய கடிதத்தின் பிரதியொன்றை என்னிடம் தந்தார். பெற்றுக் கொண்ட நான் இன்னும் இரண்டு வாரங்களுக்குள் இதனை நீங்கள் செய்தி மூலம் பகிரங்கப்படுத்துங்கள் என்று கேட்டுக் கொண்டேன். அதற்கு அவர் இணக்கம் தெரிவித்தார்.

இந்தச் சந்தர்ப்பத்தில் தான் உள்ளுராட்சி மன்றங்கள் தொடர்பான புதிய தேர்தல் முறை தொடர்பில் ஆணைக்குழு தனது முதலாவது அறிக்கையை வெளியிட்டிருந்தது. எனக்கும் திருவாளர் கிருஸ்ணபிள்ளைக்கும் இடையிலான அடுத்த ஒரு சந்திப்பில் அவர் தனக்கு அடுத்த மாகாணசபைத் தேர்தலில் வேட்பாளராக நிற்பதற்கு வாய்ப்புத் தரவேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அதிலே பிரச்சினை இல்லை என்றும் ஆனால் புதிய மாகாணசபைத் தேர்தல் சட்டத்தின் பிரகாரம் மட்டக்களப்பு மாவட்டம் ஆறு தேர்தல் தொகுதிகளாகப் பிரிக்கப்படும் அவ்வாறு பிரிக்கப்படும் போது ஒவ்வொரு தொகுதிக்கும் தொகுதி வேட்பாளர் ஒருவரும், பட்டியல் வேட்பாளர் ஒருவரும் நிறுத்தப்பட வேண்டும். பட்டியல் வேட்பாளர் தொடர்பில் எவ்வித பிரச்சினையும் இருக்காது. ஆனால், தொகுதி வேட்பாளர் தொடர்பில் இப்போது அதைத் தீர்மானிக்க முடியாமல் இருக்கும் ஆகவே உரிய நேரத்தில் அதனைத் தீர்மானிக்கலாம். எனவே நீங்கள் உங்கள் பதவி துறப்பைப் பத்திரிகையில் வெளியிடுவதனை உடனடுத்து உங்களைக் கட்சியில் சேர்த்துக் கொள்ளலாம் என்று தெரிவித்தேன்.

இந்த விடயம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஐயா சம்மந்தன் அவர்களுக்கும், தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா அவர்களுக்கும் தெரிவிக்கப்பட்டதோடு, அவர்களே முன்னாள் தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இந்த விடயம் பற்றிச் சொல்லியிருந்தார்கள். ஆனாலும், திருவாளர் கிருஸ்ணபிள்ளை அவர்கள் என்னிடம் தந்த கடிதத்தை பத்திரிகையில் வெளியிடாத அதேவேளை தான் தொகுதி வேட்பாளராக நிறுத்தப்படுவேன் என்பது தொடர்பில் உத்தரவாதம் வேண்டும் என்ற நிலைப்பாட்டுடன் இருந்தார். இந்த விடயங்கள் தொடர்பாக உரிய நேரத்தில் நாங்கள் தீர்மானிக்கலாம் என நான் ஏற்கனவே குறிப்பிட்ட விடயத்தையே அவருக்குச் சொல்லியிருந்தேன். அதனை அவர் எவ்வாறு விளங்கிக் கொண்டார் என்றும் தெரியாது, தனது பதவி துறப்பை பகிரங்கப்படுத்துவதை அவர் ஏன் செய்யவில்லை என்பதும் எனக்கு விளங்கவில்லை. பின்னர் கூட தனிப்பட்ட முறையில் எங்கள் கட்சி உறுப்பினர்கள் சிலர் மூலம் எங்களுடன் வந்து இணையுமாறு அவருக்குச் சொல்லியனுப்பியிருந்தேன். அவர்களிடம் அவர் வெவ்வேறு கதைகளைச் சொன்னதாத் தெரிவித்தனர்.

தற்போதய நிலையில் உத்தேச மாகாணசபைத் தேர்தல் சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படவில்லை என்பதோடு பழைய முறையிலேயே மாகாணசபைத் தேர்தல்கள் நடைபெறும் என்ற ஊகம் இருக்கின்றது. திருவாளர் கிருஸ்ணபிள்ளை அவர்கள் ஏற்கனவே நான் சொன்னதன் பிரகாரம் கட்சியில் இணைந்திருந்தால் அவர் விலியுறுத்திக் கொண்டிருந்த அந்த தொகுதி வேட்பாளர் என்கின்ற விடயம் இயல்பாகவே நீங்கிப் போய் அவர் மாகாணசபை வேட்பாளராக ஆகும் உத்தரவாதம் இயல்பாகவே கிடைத்திருக்கும்.

என்னுடைய விளக்கங்களில் மயக்கம் இருந்திருந்தால் அவர் அது தொடர்பில் என்னிடம் தெளிவு பெற்றிருக்கலாம். அவரைச் சேர்த்துக் கொள்வதிலும், மாகாணசபை தொடர்பில் உரிய நேரத்தில் தீர்மானம் எடுப்பதிலும் எந்தவிதத் தடங்கல்களும், மாற்றங்களும் இருக்கவில்லை. இதனை அவர் விளங்கிக் கொள்ளாவிட்டாலும் மக்கள் விளங்கிக் கொள்வார்கள் என்பதில் சந்தேகம் இல்லை என்று தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.