சமூக இடைவெளியை தளர்த்துவதால் பாரிய பாதிப்பினையே எதிர்கொள்ள நேரிடும் – முன்னாள் பிரதமர் எச்சரிக்கை

கொரோனா வைரஸ் தொடர்பான பரிசோதனைகளின் அளவை அதிகரிக்காமல் சமூக இடைவெளியை தளர்த்துவதால் பாரிய பாதிப்பினையே எதிர்கொள்ள நேரிடும் என ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஆகவே ஏற்கனவே கூறப்பட்டமைக்கு அமைய நாளொன்று முன்னெடுக்கப்படும் பரிசோதனைகளின் அளவை 3000 வரை அதிகரிக்க வேண்டும் என்று அரசாங்கத்தை அவர் வலியுறுத்தியுள்ளார்.

இந்த விடயம் குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், “வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக ஏனைய நாடுகளைப் போன்றே சமூக இடைவெளி பேணப்பட்டு வருகிறது. எமது நாட்டில் தற்போது கட்டம் கட்டமாக இந்த சமூக இடைவெளி தளர்த்தப்பட்டு வருகிறது.

எனினும் சுகாதாரத்துறையினரின் ஆலோசனைக்கு அமையவே இதனை முன்னெடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்த நான் விரும்புகின்றேன். அதே போன்று நாளொன்றுக்கு குறைந்தபட்சம் 3000 பரிசோதனைகளாவது முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதை நான் ஆரம்பம் முதலே வலியுறுத்தி வருகின்றேன்.

ஆனால் அதற்கான வசதிகள் எம்மிடம் உள்ளனவா உள்ளிட்ட சந்தேகங்கள் மக்கள் மத்தியில் நிலவுகின்றன. எனவே இவை தொடர்பில் மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும்.

பரிசோதனை அளவுகளை அதிகரிக்காமல் சமூக இடைவெளி தளர்த்தப்பட்டால் அதனால் பாரிய பாதிப்புக்கள் ஏற்படக் கூடும். அதே போன்று நோய் பரவலைக் கட்டுப்படுத்தல் மற்றும் சிகிச்சையளித்தல் என்பவற்றில் நேரடியாகத் தொடர்புபடுபவர்களினதும் ஏனைய அத்தியாவசிய சேவைகளில் ஈடுபட்டுள்ளவர்களினதும் சுகாதார பாதுகாப்பை மேலும் ஸ்திரப்படுத்த வேண்டும்.

அவர்களுக்குத் தேவையான முகக் கவசங்கள், ஆடைகள், சமூக இடைவெளியைப் பேணுவதற்கான வசதிகள் உள்ளிட்ட அனைத்து பாதுகாப்பு செயற்திட்டங்களும் தற்போதுள்ளதை விடவும் பலப்படுத்தப்பட வேண்டும். அவ்வாறில்லை என்றால் அந்த துறையினர் பாரிய ஆபத்தான நிலைமைக்கு தள்ளப்படுவர்.

இந்த சந்தர்ப்பத்தில் ஏனைய நாடுகள் முகக்கவசங்கள் மற்றும் பரிசோதனை உபகரணங்கள் என்பவற்றை இலட்சக்கணக்கில் கொள்வனவு செய்துள்ளன. எதிர்கால சவால்களுக்கு முகங்கொடுப்பதற்காக மேலும் பத்து இலட்சத்துக்கும் அதிகளவில் கொள்வனவு செய்ய தீர்மானித்துள்ளன.

வைரஸ் ஒழிப்பு தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனத்தினால் இலங்கைக்கு பிரத்தியேகமான ஆலோசனைகள் வழங்க்கப்பட்டுள்ளன. அவை தொடர்பில் மக்களுக்கு தெளிவுபடுத்துமாறும் அவற்றை நடைமுறைப்படுத்துமாறும் நான் இதற்கு முன்னரே வலியுறுத்தியிருந்தேன்.

அந்த கோரிக்கையை நான் மீண்டும் அரசாங்கத்திடம் முன்வைப்பதற்கு விரும்புகின்றேன். வைரஸ் தொற்று தொடர்பில் மக்களை தெளிவுபடுத்தல், முகாமைத்துவப்படுத்தல் என்பன ஒழுங்குமுறைப்படி முன்னெடுக்கப்படுவதில்லை. அரசாங்கத்தின் அறிவித்தல்கள் என்பவற்றை தெரிந்து கொள்வது கடினமானதாகும். எனவே பொது செயற்திட்டங்களை முன்னெடுக்குமாறு நான் அரசாங்கத்திடம் கோருகின்றேன்.

அதே போன்று அரச ஊழியர்களின் சம்பளம் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை தொடர்பில் நான் கவனம் செலுத்தியிருக்கின்றேன். உருவாகியுள்ள பாதிப்பு அரச சேவையாளர்களின் சம்பளத்தினால் கட்டுப்படுத்தக் கூடியதா? மறுபுறம் அரச ஊழியர்கள் தமது சம்பளத்தை வழங்குவதால் நாட்டின் பொருளாதாரத்திற்கு கிடைக்கும் பலம் யாது? இந்த பிரச்சினைக்கான தீர்வினை மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும்.

இந்த ஆபத்தான நிலைமையில் ஐக்கிய தேசிய கட்சியாகிய நாம் அரசியல் இலாபம் பெற்றுக் கொள்ளும் நோக்கில் செயற்படுவதில்லை. அனைத்து சந்தர்ப்பங்களிலும் வைரஸ் தொற்றினை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளுக்கு நாம் ஒத்துழைப்பு வழங்கியிருக்கின்றோம்.

எதிர்காலத்திலும் அதே போன்று செயற்படுவோம். ஆபத்தை வெற்றி கொள்வதற்காக பிரயோசனமான யோசனைகளை முன்வைத்தோம். எதிர்காலத்திலும் இவ்வாறே செயற்படுவோம். நாம் அரசியல் இலாபத்திற்காக அன்றி நாட்டுக்காக இந்த அர்ப்பணிப்பை செய்கின்றோம். அதே போன்று செயற்பட வேண்டியது அரசாங்கத்தினதும் பொறுப்பாகும் என்பதைக் கூற விரும்புகின்றேன். இவ்வாறு செயற்படுவதன் மூலமே ஆபத்தை கட்டுப்படுத்த முடியும்” என கூறியுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்