பல நாட்களுக்குப் பின்னர் புத்தளத்தில் பொலிஸ் ஊரடங்கு தளர்வு

புத்தளம் மாவட்டத்தில் பல நாட்களுக்குப் பின்னர் இன்று (திங்கட்கிழமை) அதிகாலை 5.00 மணிக்கு பொலிஸ் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டது.

இந்நிலையில், மாவட்டத்தின் பல நகரங்களில் குறைந்தளவிலான பொதுமக்களே வெளியிடங்களுக்கு வருகை தந்தனர் என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

மேலும் வங்கிகள் மற்றும் மருந்தகங்களுக்கு முன்பாக பொதுமக்கள் சமூக இடைவெளியைப் பின்பற்றியதோடு, முக கவசம் அணிந்து வருகை தந்திருந்தனர் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

உலகை அச்சுறுத்தியுள்ள கொரோனா வைரஸின் தாக்கம் இலங்கையிலும் சடுதியாக அதிகரித்ததைத் தொடர்ந்து அதனைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நாடளாவிய ரீதியில் கடந்த மார்ச் மாதம் 20ஆம் திகதி ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டது.

அதன் பின்னர் மார்ச் 23ஆம் திகதி நாடளாவிய ரீதியில் ஊரடங்கு தளர்த்தப்பட்டது. எனினும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்தமையைத் தொடர்ந்து மீண்டும் 24ஆம் திகதி நாடளாவிய ரீதியில் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டது.

அதன் பின்னர் பல மாவட்டங்களில் இடைக்கிடையில் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டது. எனினும் கொழும்பு, கம்பஹா மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் கொரோனோ வைரஸினால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகமாக இனங்கானப்பட்ட நிலையில், தொடர்ச்சியாக குறித்த மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டு வந்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

இதேவேளை புத்தளம் உள்ளிட்ட 23 மாவட்டங்களில் இன்று ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ள போதிலும் கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களில் மறு அறிவித்தல் வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.