விமான சேவைகளை மீண்டும் ஆரம்பிக்க அரசாங்கம் தீர்மானம்

இலங்கைக்கான விமான சேவைகளை எதிர்வரும் ஜூன் மாதம் முதல் மீண்டும் ஆரம்பிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

எனினும் நாட்டுக்குள் வரும் சகல பயணிகளையும் பரிசோதனை செய்யும் விசேட வேலைத்திட்டம் குறித்து அரசாங்கம் ஆராய்ந்து வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

விமான சேவைகளை வழமைக்கு கொண்டுவருவது குறித்து அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம் தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இந்த விடயம் தொடர்பாக மேலும் தெரிவித்த அவர், “விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளமையினால், நாட்டுக்கு கிடைக்கவிருந்த மிகப்பெரிய வருமானம் இல்லாது போயுள்ளது. குறிப்பாக சுற்றுலாத்துறை பாதிக்கப்பட்டுள்ள காரணத்தினால் பொருளாதார ரீதியில் பாரிய பாதிப்புகளை எதிர்கொள்ள நேர்ந்துள்ளது.

எனினும் தற்போது நாட்டை மீண்டும் வழமைக்கு கொண்டுவருவதற்கான தீர்மானங்கள் அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ளன.

பொருளாதார காரணிகளை கருத்திற்கொண்டே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய விமான சேவைகளையும் வழமைக்கு கொண்டுவர வேண்டும் என்ற காரணிகளை நாம் முன்வைத்துள்ளோம்.

மீண்டும் விமான சேவைகளை முன்னெடுப்பது குறித்து அரசாங்கம் சுகாதார அதிகாரிகளுடன் பேசி ஒரு தீர்மானம் எடுக்கவுள்ளது.

எவ்வாறு இருப்பினும் எதிர்வரும் ஜூன் மாதம் தொடக்கம் இலங்கைக்கான விமான சேவைகள் வழமைக்கு கொண்டுவரப்படும் என்ற நம்பிக்கை உள்ளது.

அதற்கமைய இப்போதிருந்து விமான நிலையங்களின் பராமரிப்பு மற்றும் பயணிகளை கண்காணிக்கும் மருத்துவ இயந்திரங்களை பொருத்துவது குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

இலங்கைக்கு வரும் வெளிநாட்டு பயணிகள் மற்றும் இலங்கை பயணிகள் அதேபோல் இலங்கையில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்லும் பயணிகள் என சகலருக்கும் மருத்துவ பரிசோதனைகளை முன்னெடுப்பது குறித்தும் விமான பயணங்களில் சில மாற்று நேர அட்டவணைகளை கையாளவும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது” என மேலும் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.