சுமந்திரனின் கூற்றால் கொதித்தெழுந்த இளஞ்செழியன்

விடுதலைப்புலிகளின் போராட்ட அரசியல் வழிமுறைகளை கொச்சைப்படுத்தும் வகையில் கருத்துக்களை வெளியிட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அவர்களுக்கு எதிராக இலங்கை தமிழரசுக்கட்சியின் முக்கியஸ்தர்களில் ஒருவரான பீட்டர் இளஞ்செழியன் தனது கண்டனங்களை தெரிவித்துள்ளார்.

பீட்டர் இளஞ்செழியனின் சகோதரர் ஒருவர் 2009 இறுதி யுத்தத்தின்போது ஆனந்தபுரம் பகுதியில் வீரச்சாவடைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரால் வெளியிடப்பட்ட கண்டன அறிக்கை வருமாறு.

தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆயுத போராட்டத்தை மறுதலிக்க சுமந்திரனுக்கு உரித்தில்லை.

வடக்கு கிழக்கு உட்பட தமிழ் மக்களின் உரிமைக்காக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் தந்தை செல்வா அவர்களின் அகிம்சை வழி போராட்டத்தை தொடர்ந்து தமிழீழ விடுதலைப்புலிகளினால் ஆயுதம் ஏந்தி போரடியது.

தமிழ் மக்களுக்குள் திணிக்கப்பட்ட ஆயுத போராட்டம் அல்ல அந்த போராட்டம். தமிழ் மக்களுடன் இணைந்து பெளத்த, சிங்கள பேரினவாதத்துக்கு எதிராக மேற் கொண்ட ஆயுத போராட்டம். இதை மறுதலிக்க முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுக்கு உரித்து இல்லை.

பெளத்த, சிங்கள பேரினவாதிகள் தமிழ் மக்கள் மேல் அடக்கு முறையை கட்டவிழ்த்த போது அவருடைய ஐந்து வயதில் இருந்து, அதாவது ஐம்பது வருடங்கள் கொழும்பு சென்று வாழ்ந்து வந்த சுமந்திரனுக்கு , வடக்கு கிழக்கில் தமிழ் மக்கள் அனுபவித்த கொடூரங்களை அறியாத சுமந்திரனுக்கு, தெற்கில் விடுதலை போராட்டத்தை கொச்சைப்படுத்தி பேசி கிடைத்த அதிஸ்டத்தால் வாழ்ந்தவருக்கு ஆயுத போராட்டம் பற்றி என்ன தெரியும்?

சுமந்திரனின் கருத்தானது தமிழ் மக்களின் விடுதலைக்காய் போராடிய போராளிகள் , போராடி தமது உயிர்களை காவியமாக்கிய மாவீரர்களையும், தமிழ் மக்களையும் கொச்சைப்படுத்துவதாகவே நானும் எம் மக்களும் கருதுகின்றோம்.

உலக நாடுகள் பல தமிழ் மக்களின் இன விடுதலை போராட்டத்தை ஏற்றுக் கொண்டுள்ள நேரத்திலே, யாழ்ப்பாணத்தில் தியாகி திலீபனுக்கு அஞ்சலி செலுத்தி விட்டு, மாவீரர்களுக்கும், போராளிகளுக்கும் தமிழ் மக்களின் உணர்வுகளுக்கும் துதி பாடி விட்டு, கொழும்பில் மாவீரர்களுக்கும் போராளிகளுக்கும் தமிழ் மக்களின் உணர்வுகளையும் புண்படுத்தி சிங்கள மக்களை திருப்திப்படுத்தி மகிந்த அரசிடம் மீண்டும் அதிஷ்டங்களை பெற முயற்சிப்பதாகவே நான் கருதுகின்றேன்.

தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆயுதப்போராட்டத்தை ஏற்றுக் கொள்ளமாட்டேன் என்று கூறிய கருத்து தமிழ் தேசிய கூட்டமைப்பினதோ அல்லது இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் கருத்தாகவோ கருதக்கூடாது என்றும், அவருடைய கருத்து தொடர்பாக கட்சி மிகவிரைவில் உரிய முடிவு எடுக்கும் என நம்புகின்றேன்.

அதேபோல முல்லைத்தீவு மாவட்டத்தில் தமிழ் மக்கள் சுமந்திரன் மீது அதிருப்தி அடைந்துள்ளதுடன் தொடர்ந்தும் சுமந்திரனுக்கு கண்டனங்களையும் தெரிவித்து வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.