ரஞ்சனுக்கு வாதாடிய சுமந்திரன் ஆனந்தசுதாகரனுக்காக வாதாடதமை ஏன்? – ஜனநாயகப் போராளிகள்

சுமந்திரனின் கருத்திற்கு ஜனநாயகப் போராளிகள் கட்சியின் ஊடகப் பேச்சாளர் க.துளசி தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.

தமிழினத்தின் இருப்பு உயிர்வாழும் உரிமை மறுதலிக்கப்பட்டபோது உங்களின் அதிமேதாவித்தனம் உங்களை உங்களது சிங்கள எஜமானர்களோடு மகிழ்சியாக வைந்திருந்திருக்கலாம் ஆனால் கிராமங்களில் புத்தகப்பைகளை தூக்கி எறிந்துவிட்டு நாங்கள் ஏந்தி நின்ற ஆயுதங்களே இன்றுவரை இலங்கைத்தீவில் தமிழர்களை உயிர்காத்து வைத்துள்ளது என ஜனநாயகப் போராளிகள் கட்சியின் ஊடகப் பேச்சாளர் க.துளசி தெரிவித்துள்ளார்.

அண்மையில் சுமந்திரன் அவர்களால் வெளியிடப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான பதிவுகள் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழ்த்தேசியம் தொடர்பில் தீர்க்கமான பார்வை இல்லாதவர்கள் ஆயுதபோராட்டத்தின் அடிப்படை தெரியாதவர்கள் தமிழர்களின் பிரதிநிதியாக்கியது இனத்தின் வரமா? சாபமா? எனத்தோன்றுகிறது.

தமது சிங்கள எஜமானர்கள் எம் மீது ஆயுதப்போரை வலிந்து திணித்தபோது அதனை தமிழர்கள் அப்படியே ஏற்றுக்கொண்டு எங்களை தற்காத்துக்கொள்ளும் பொறிமுறைகளின்றி தமிழர்கள் செத்தொழிந்து போயிருக்க வேண்டுமென சுமந்திரன் கருதுகிறாரா?

ரஞ்சன் ராமநாயக்கா ரனிலுக்காக வாதாடும் நீங்கள் ஆனந்தசுதாகரனுக்கும் கண்ணதாசனுக்கும் வாதாட வக்கற்றிருக்கும் உங்களது மனோநிலை தொடர்பில் உங்களுக்கு வாக்களித்த எங்களின் மக்கள் ஒரு முடிவுக்கு வருவார்கள் என நம்புகிறோம்.

இலங்கைத்தீவின் தமிழர்களது அரசியல் பிணக்கு சர்வதேச மயப்படுத்தப்பட்டு வரும் இந்நிலையில் ஊடகப்பேச்சாளர் சுமந்திரனது இக்கூற்று தமிழர்களது தீர்வுக்கான கடந்தகால ஆயுதப்போராட்டத்தின் நியாயப்பாடுகள் அதற்காக சிந்தப்பட்ட குருதிகள் கொட்டப்பட்ட வியர்வைகள் என அனைத்தின் மீதும் மண் அள்ளிப்போடும் ஒரு சூழ்ச்சிகரமான திசைதிருப்பும் உத்தியாகவே நோக்கவேண்டி உள்ளது.

எங்களின் தியாகங்கள் அர்ப்பணிப்புகளில் ஏறிநின்று பகடையாடும் கபடத்தை தமிழ்த்தேசியகூட்டமைப்பு தொடர்ந்தும் தன் ஊடகப்பேச்சாளருக்கு வழங்கப்போகிறதா என்பது தொடர்பில் நாம் கரிசனையுடன் எதிர்பார்த்து நிற்கின்றோம் என்று தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.