தமிழீழ விடுதலைப் போராட்டத்தினையும் அதில் பங்குகொண்டவர்களையும், கொச்சைப்படுத்தினால் தமிழ்மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். சுமந்திரனின் கருத்துத் தொடர்பில் ரவிகரன்…

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் பங்குகொண்ட மாவீரர்களையோ, அங்கவீனமான போராளிகளையோ, ஏனைய போராளிகளையோ, அல்லது தலைமை தாங்கிய தமிழீழத் தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களையோ யாராவது கொச்சைப்படுத்த எண்ணினாலோ, கொச்சைப்படுத்தினாலோ அதைத் தமிழ்மக்கள் எவரும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ்தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன், அண்மையில் சிங்கள தொலைக்காட்சி ஒன்றிற்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியில், தமிழீழ விடுதலைப் போராட்டம் தொடர்பில் தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்துத் தொடர்பில், ரவிகரனிடம் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

தமிழ் மக்களுக்கு நடந்த கொடுமைகளுக்காக, தமிழ்த் தலைவர்கள் பல விதத்திலும் போராடியிருந்தனர்.

அகிம்சை வழியில் போராடி இயலாத நிலையில்தான் இளைஞர்கள் ஆயுதம் தூக்கி போராடியிருந்தனர்.

இளைஞர்கள் ஆயுதம் ஏந்திப் போராட ஆரம்பித்ததன் பின், தமிழ் மக்களின் உரிமைக்காக நியாயமாக தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு போராடவேண்டிய காலகட்டம் ஒன்று உருவாகியது.

நிச்சயமாக தமிழீழ விடுதலப்புலிகள் தமது போராட்டத்தினை, தமிழ் மக்கள் எல்லோரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் நடாத்தியிருந்தனர்.

இந் நிலையில் இலங்கை அரசாங்கத்தால் இயலாத நிலையில், பலநாடுகள் சேர்ந்து தமிழீழ விடுதலைப்புலிகளின் போராட்டத்தினை மௌனிக்கச் செய்திருந்தனர். இது அனைவரும் அறிந்த விடயம்.

இவ்வாறு ஆயுதப் போரட்டத்தினை மௌனிக்கச் செய்ததன் காரணமாக இலங்கை அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிலிருந்த வடமாகாணசபையிலும், இந்திய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிலிருந்த தமிழக சட்டமன்றத்திலும், முள்ளிவாய்க்காலில் இடம்பெற்றது ஒரு இன அழிப்புப் போர் என்பதனை தீர்மானமாக நிறைவேற்றி உலக நாடுகளின் பார்வைக்கும் அனுப்பிவைக்கப்பட்டது.

இந்த வகையிலே தமிழ் மக்களுடைய போராட்டத்தினை ஏற்றுக்கொண்ட தமிழ் மக்கள் அனைவரும் தேசியத் தலைவரை, தமிழீழத்தின் தேசியத் தலைவராகவே பார்க்கின்றனர்.

இது ஒருபுறம் இருக்க தமிழீழ தேசியத் தலைவரின் வழிநடத்தலில் இடம்பெற்ற போராட்ட காலத்தில், அரசியல் பகுதிக்காக தமிழ்தேசியக்கூட்டமைப்பை தமிழீழ விடுதலைப் புலிகளே உருவாக்கியிருந்தனர்.

தமிழீழ தேசியத் தலைவரால் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது என்ற வகையிலேயே, தமிழ் மக்கள் அனைவரும் தங்களுடைய வாக்குகளை தமிழ்த்தேசியக்கூட்டமைப்பிற்கு அளித்துவருகின்றனர் என்பதும் அனைவரும் அறிந்த விடயம்.

தமிழீழ விடுதலைப் போராட்டமானது, தமிழ் மக்கள்மீது மேற்கொள்ளப்பட்ட அநீதியான செயற்பாடுகளைத் தட்டிக் கேட்கும் விதமாகவே இடம்பெற்றிருந்தது.

இந்தப் போராட்டத்தில் பங்குகொண்ட மாவீரர்களையோ, அங்கவீனமான போராளிகளையோ, ஏனைய போராளிகளையோ, அல்லது தலைமை தாங்கிய தமிழீழத் தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களையோ யாராவது கொச்சைப்படுத்த எண்ணினாலோ, கொச்சைப்படுத்தினாலோ அதைத் தமிழ்மக்கள் எவரும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என்பதைத் தெரிவித்துக்கொள்கின்றேன். என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.