மழைக்கு மத்தியிலும் மதுபான சாலைகளில் அலைமோதும் மதுபிரியர்கள்

கொழும்பு மற்றும் கம்பஹா தவிர்ந்த ஏனைய 23 மாவட்டங்களில் மதுபானசாலைகள் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து மதுபான சாலைகளுக்கு முன்பாக மதுபிரியர்கள் அலைமோதுவதாக எமது பிராந்திய செய்தியாளர்கள் தெரிவித்தனர்.

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக மறு அறிவித்தல் வரை மதுபான சாலைகள் மூடப்பட்டிருந்தன. இந்நிலையில் இன்று (புதன்கிழமை) முதல் கடும் நிபந்தனைகளுடன் மதுபானசாலைகளை திறப்பதற்கு அரசாங்கம் அனுமதி வழங்கியிருந்தது.

இதனையடுத்து வடக்கு, கிழக்கு, மலையகம் உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளிலும் உள்ள மதுபான நிலையங்களில் மது பிரியர்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதாக எமது பிராந்திய செய்தியாளர்கள் தெரிவித்தனர்.

நாட்டின் சில பகுதிகளில் மழைக்கு மத்தியிலும் சமூக இடைவெளியினை பின்பற்றி இவ்வாறு மதுபானத்தை கொள்வனவு செய்து வருவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

மதுபான உரிமையாளர்களினால் மதுபான நிலையங்களுக்குள் ஒவ்வொருவராக  செல்லவே அனுமதிக்கப்படுகின்றனர்.

இந்நிலையில், அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் நிலையங்களைவிடவும் மதுபான விற்பனை நிலையங்களுக்கு முன்னால் மக்கள் கூட்டம் அதிகமாகக் காணப்பட்டதாகவும் எமது பிராந்திய செய்தியாளர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, சமூக இடைவெளி உட்பட சுகாதார நடைமுறைகள் எதையும் பின்பற்றாமல் மதுபானம் வாங்குவதற்கு முண்டியடித்துக்கொண்டு செயற்பட்டதால் மலையகத்தின் சில பகுதிகளில் சர்ச்சை ஏற்பட்டதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்

குறிப்பாக ஹட்டன் நகரிலுள்ள மதுபான விற்பனை நிலையங்களில் மக்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்காக பொலிஸார் தலையிடவேண்டிய நிலை ஏற்பட்டதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

இலங்கையில் கொரோனா வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்தி மக்களை பாதுகாப்பதற்காக கடந்த மார்ச் 20ஆம் திகதி முதல் தொடர் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டது.

ஆரம்பத்தில் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படும்போது மதுபான சாலைகளை திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. எனினும் சமூக இடைவெளி உட்பட பல காரணங்களைக் கருத்திற்கொண்டு மதுபான சாலைகளை மறு அறிவித்தல் வரை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தன்னது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.