ராஜிதவை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு சி.ஐ.டி.க்கு நீதிமன்றம் உத்தரவு

முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் சி.ஐ.டி.க்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக நவம்பர் 10 ஆம் திகதி வெள்ளை வான் ஊடக சந்திப்பை ஏற்பாடு செய்த வழக்கில் முன்னாள் அமைச்சர் கடந்த டிசம்பர் மாதம் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டபோதும் உடல்நல குறைவு காரணமாக தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இதனை அடுத்து கடந்த டிசம்பர் மாதம் 30 ஆம் திகதி ராஜித சேனாரத்னவை 500,000 ரூபாய் பெருமதியான இரண்டு சரீர பிணையில் செல்ல கொழும்பு தலைமை நீதவான் லங்கா ஜெயரத்ன உத்தரவிட்டிருந்தார்.

இருப்பினும், பிணை வழங்கிய நீதவான் நீதிமன்றத்தின் முடிவை எதிர்த்து சட்டமா அதிபர் கடந்த ஜனவரி 08 ஆம் திகதி  திருத்த விண்ணப்பத்தை தாக்கல் செய்தார்.

இந்நிலையில் குறித்த திருத்த விண்ணப்பம் இன்று மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட பிணை உத்தரவு இரத்து செய்யப்பட்டது.

இந்த உத்தரவின் மூலம், ராஜித சேனாரத்னவை கைது செய்வதற்கான அதிகாரம் குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு கிடைக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.