தமிழரசுக் கட்சியில் சுமந்திரன் நீடித்தால் அது சம்பந்தன், மாவையின் பலவீனமே- சிவசக்தி ஆனந்தன்

தமிழின உரிமைப் போராட்டத்தின் ஓரங்கமான ஆயுத விடுதலைப் போராட்டத்தினை மோசமாக விமர்சித்த சுமந்திரன் தமிழரசுக் கட்சியில் நீடித்தால் அது அக்கட்சியின் சிரேஷ்ட தலைவர் இரா.சம்பந்தன், தலைவர் மாவை.சேனாதிராஜா ஆகியோரின் பலவீனத்தை வெளிப்படுத்துவதாக அமையும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

அதேநேரம், கூட்டமைப்பின் பேச்சாளரான சுமந்திரன் வெளியிட்ட கருத்துக்களின் ஆழத்தினையும் பின்னணியையும் நன்கறிந்த ஆயுத விடுதலைப் போராட்டவழி வந்த ரெலோ, புளொட் தரப்புக்கள் வெறுமனே கண்டன அறிக்கைகளுக்கு அப்பால் இந்த விடயத்தில் தீர்க்கமான முடிவெடுப்பார்களா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

அவர் ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள விசேட அறிக்கையில், “தந்தை செல்வா முதல் அமிர்தலிங்கம் வரையில் சாத்வீக ரீதியாக முன்னெடுத்த போராட்டங்களின் மீதான அடக்குமுறையும், கையறு நிலையுமே 1976இல் வட்டுக்கோட்டையில் தனி ஈழத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அதனைநோக்கிய ஆயுதப் போராட்டம் முன்னெடுக்கப்படுவதற்கு காரணமாகியிருந்தன. தமிழ் தலைவர்கள் ஆயுத ரீதியான விடுதலைப் போராட்டத்தினை அப்போதைய இளைஞர்களிடத்தில் ஒப்படைத்தனர்.

தமிழின விடுதலைக்காக ஆயுதமேந்திய அனைத்து இயக்கங்களிலும் தங்களை இணைத்துக்கொண்ட ஒவ்வொரு தமிழ் மகனும் தன் அன்புக்குரியவர்களை விட்டுப்பிரிந்து அடுத்த சந்ததியினர் உரிமைகளுடன் சுதந்திரக் காற்றை சுவாசிக்க வேண்டும் என்பதற்காக தனது இன்னுயிரை ஈகம் செய்வதற்கு தயாராகவே இருந்துள்ளார்கள். அவ்விதமாகவே செயற்பட்டுள்ளார்கள்.

இதில் ஆயுத விடுதலைப் போராட்டத்தினை மூன்று தசாப்த நீட்சியை தமிழீழ விடுதலைப் புலிகள் பதிவு செய்துள்ளார்கள் என்பதே வரலாறு.

ஆயுதப் போராட்டத்திற்கு பிள்ளையார் சுழியிட்டு தீர்மானங்களை எடுத்த பெருந்தலைவர்களான தந்தை செல்வாவும், அமிர்தலிங்கமும் வழிநடத்திய தமிழரசுக் கட்சிக்குள் இருந்துகொண்டு, அவர்களை முட்டாள்கள் என்று கூற சுமந்திரன் விளைகின்றாரா?

ஆயுதப் போராட்ட காலத்தில் போராட்டம் பற்றி எதுவுமறியாது, எந்தப் பங்களிப்பும் செய்யாது, ஆயுத விடுலைப் போராட்டம் மௌனிக்கப்பட்டதும் அரசியல் களம்புகுந்த சுமந்திரனுக்கு தமிழினத்தின் வரலாறும், இளைஞர்களின் வலிகளும் இதியாங்களும் ஈகங்களும் தெரியுமா?

இவ்வாறு மெல்லமெல்ல ஆயுத போராட்டத்தின் மீதும், ஆயுத இயக்கங்கள் மீதும் குற்றச்சாட்டுக்களை சுமத்தி ஈற்றில் சிங்களத்தின் ஒற்றையாட்சிக்கு மண்டியிட்டு சுகபோகங்களை அனுபவிப்பதே சுமந்திரனின் திரைமறைவு நிகழ்ச்சி நிரலாக இருக்கலாம். அதற்காக ஒட்டுமொத்த தமிழினத்தினையும் பலிக்கடாவாக்குவதற்கு இடமளிக்கமுடியாது.

தமிழீழ விடுதலைப் புலிகள் மீது உள்மனதில் வஞ்சம் கொண்டிருந்த சம்பந்தனும் தலைமைத்துவ பண்புகளற்ற கையறு நிலையில் இருக்கும் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவையும், விடுதலைப் புலிகளை மறவர்களாகக் கொண்டு மேடைப் பேச்சுக்களில் வெளிப்படுத்தும் சிறிதரன் உள்ளிட்டவர்களும் பங்காளிக் கட்சிகளான புளொட், ரெலோ இயக்கங்களும், சுமந்திரனின் முன்னால் அடங்கியே இருந்தனர்.

நல்லாட்சி அரசாங்கத்தின் நான்கரை வருடங்களிலும் சுமந்திரன் காட்டிய இடங்களிலெல்லாம் கையுயர்த்தியும், கையெழுத்திட்டும் வந்தனர்.

எனவே கூட்டமைப்பின் பங்காளிகளான ரெலோவும், புளொட்டும் வெறுமனே கண்டன அறிக்கைகளுடன் இந்த விடயத்தினை கைவிட்டு ஆசன அரசியலை முன்னெடுக்கப்போகின்றார்களா என்பது பிரதான கேள்வியாகின்றது.

அவ்வாறு முன்னெடுப்பார்களாயின் அவர்களின் இயக்கங்களிலும் விடுதலைப் புலிகள் உள்ளிட்ட ஏனைய இயக்கங்களிலும் ஆகுதியாகிய போராளிகளின் ஆத்மாக்களுக்கும், தமிழ் மக்கள் சிந்திய இரத்தங்களுக்கும் என்ன பதிலளிக்கப்போகின்றார்கள் என்பதும் முக்கியமாகின்றது.

அதேபோன்று, ஒட்டுமொத்த தமிழினமுமே ஏதோவொரு விடுதலை இயக்கத்தின் மூலம் ஆயுதப் போராட்டத்தினை ஏற்று உணர்வெழுச்சியுடன் ஆதரித்திருக்கின்றார்கள்.

தமிழரசுக் கட்சியினதும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினதும் பேச்சாளராக விளங்கும் சுமந்திரன் வெளியிடும் கருத்துக்கள் அவரின் தனிப்பட்ட கருத்துக்களே என சம்பந்தனும் மாவையும் எப்போதும் கூறிவருவது நகைப்பிற்கிடமானதே” என்று குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.