மரக்கறி வகைகளின் விலைகள் வெகுவாகக் குறைவடைந்துள்ளதால் நுவரெலியா மாவட்ட விவசாயிகள் பெரும் பாதிப்பு

(க.கிஷாந்தன்)

மரக்கறி வகைகளின் விலைகள் வெகுவாகக் குறைவடைந்துள்ளதால் நுவரெலியா மாவட்ட விவசாயிகள் பெரும் நட்டத்தை எதிர்நோக்கியுள்ளனர். உற்பத்திக்காக செலவிட்ட பணத்தைக்கூட ஈடுசெய்ய முடியாதிருப்பதாக கவலை வெளியிடும் விவசாயிகள், இது விடயத்தில் அரசாங்கம் உடனடியாக தலையிட வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கின்றனர்.

இலங்கையில் அதிகளவு மரக்கறி உற்பத்தி செய்யப்படுகின்ற மாவட்டங்களில் நுவரெலியா மாவட்டமும் ஒன்றாகும். அங்கு வாழும் பலர் விவசாயத்தையே முழுமையாக நம்பியுள்ளனர். பெருந்தோட்டத்துறையில் தொழில் செய்பவர்கள்கூட, உப தொழிலாக விவசாயத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

எனினும், கொரோனா வைரஸ் பரவலையடுத்து, மக்களை பாதுகாப்பதற்காக நாட்டில் தொடர் ஊடரங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டது. இதனால் சந்தைகளுக்கு சென்று தமது விளைச்சலை விநியோகிக்க முடியாத நிலை நுவரெலியா மாவட்ட விவசாயிகளுக்கு ஏற்பட்டது. தோட்டப்பகுதிகளுக்கு வருகைதந்த வியாபாரிகளும் குறைந்த விலைக்கே மரக்கறி வகைகளை கொள்வனவு செய்துள்ளனர். வைத்திருந்தால் அழுகிவிடும் என்ற அச்சத்தால் நட்டத்தைக்கூட பொருட்படுத்தாமல் விவசாயிகள் அவற்றை வழங்கியுள்ளனர்.

ஊடரங்கு சட்டம் தளர்த்தப்பட்ட சூழ்நிலையில் எதிர்பாராத அளவில் விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இதனால் ஒரு கிலோ நோக்கல், ராபு, தக்காளி ஆகியவற்றை 10 ரூபாவுக்குகூட விற்பனை செய்யமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

கரட், கோவா, போஞ்சி ஆகியவற்றின் விலைகளும் குறைவடைந்துள்ளன. இதனால், விவசாயத்துக்காக செலவிட்ட தொகையைக்கூட மீள பெறமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினர்.

” எமக்கு மானிய விலையில் உரம் வழங்கப்பட்டது. நம்பி விவசாயமும் செய்தோம். தோட்டத்தில் சிலர் வேலை செய்கின்றனர். அவர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும். தோட்டத்தை பராமரிக்க வேண்டும். இதற்கு பணம் தேவைப்படும். இவ்வளவு கஷ்டத்துக்கு மத்தியில் உற்பத்தி செய்தும், உரிய விலைக்கு விற்பனை செய்ய முடியாதுள்ளது. எனவே, அரசாங்கம் தலையிட்டு கட்டுப்பாட்டு விலையை விதிக்க வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் விவசாயிகளுக்கு மானியம் வழங்கவேண்டும்.” – என நுவரெலியா மாவட்ட விவசாயிகள் தெரிவித்தனர்.

உற்பத்திகளை நியாயமான விலையில் விற்பனை செய்வதற்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்குமாறும் அவர்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கின்றனர். அவ்வாறு இல்லாவிட்டால் விவசாயத்தையும் கைவிடவேண்டிய நிலைக்கு தள்ளப்படுவோம் என கருத்து வெளியிட்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.