இலங்கையில் நடைபெறவிருந்த உலகக்கிண்ண தகுதிச்சுற்று போட்டிகள் ஒத்திவைப்பு!

இலங்கையில் நடைபெற இருந்த மகளிர் உலகக்கிண்ண ஒருநாள் கிரிக்கெட் தகுதிச்சுற்று போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

அத்துடன், ஐ.சி.சி.யின் பத்தொன்பது வயதுக்குட்பட்ட உலகக்கிண்ண ஐரோப்பா பிரிவு- 2 தகுதி சுற்றுப் போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

ஐ.சி.சி.யின் விரிவான தற்செயல் திட்டமிடல் செயல்பாட்டின் ஒரு பகுதியாக, உறுப்பினர்கள், சம்பந்தப்பட்ட அரசு மற்றும் பொது சுகாதார அதிகாரிகளுடன் கலந்தாலோசித்த பின்னர், இத்தொடரை ஒத்திவைப்பதாக, சர்வதேச கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

மூன்று அணிகளை தேர்வு செய்வதற்கான தகுதிச் சுற்று போட்டிகள், இலங்கையில் எதிர்வரும் ஜூலை 3ஆம் திகதி முதல் 19ஆம் திகதி வரை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. மகளிர் உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர் எதிர்வரும் ஆண்டு பெப்ரவரி மாதம் 6ஆம் திகதி முதல் மார்ச் 7ஆம் திகதி நியூஸிலாந்தில் நடைபெறவுள்ளது.

இதேபோல ஐரோப்பிய பிராந்திய தகுதிப் போட்டிகள் எதிர்வரும் ஜூலை 24ஆம் திகதி முதல் 30ஆம் திகதி வரை டென்மார்க்கில் நடைபெற இருந்தது. ஐ.சி.சி.யின் பத்தொன்பது வயதுக்குட்பட்ட கிரிக்கெட் உலகக் கிண்ணம் 2022ஆம் ஆண்டு நடைபெறவுள்ளது.

தற்போது ஒத்திவைக்கப்பட்ட தகுதிப் போட்டிகள் எப்போது நடத்தப்படுவது பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியமானது என ஐ.சி.சி தீர யோசித்து வருகின்றது.

உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று காரணமாக, கடந்த மார்ச் மாதம் 12ஆம் திகதிக்கு பிறகு எந்தவிதமான கிரிக்கெட் போட்டிகளும் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.