வவுனியாவில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 111 பேர் விடுவிப்பு!

வவுனியாவில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 111 பேர் தனிமைப்படுத்தல் காலம் முடிவடைந்து வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர்.

வவுனியா, பெரியகட்டு இராணுவ முகாமில் தனிமைபப்படுத்தப்பட்டிருந்த 111 பேரே இவ்வாறு இன்று (வியாழக்கிழமை) காலை வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

வவுனியா பெரியகட்டு இராணுவ முகாமில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா வைரஸ் தனிமைப்படுத்தல் முகாமுக்கு கடந்த இரு வாரங்களிற்கு முன்னர் கடற்படையை சேர்ந்த குடும்பத்தினர்கள் அழைத்து வரப்பட்டிருந்தனர்.

வெலிசறையில் அமைந்துள்ள கடற்படை முகாமில் பணியாற்றிய 400 இற்கும் மேற்பட்ட கடற்படை உத்தியோகத்தர்களுக்கு கொரோனா தொற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்நிலையில் குறித்த முகாமில் கடமையாற்றிய கடற்படை வீரர்கள் மற்றும் அவர்களது உறவினர்கள் தனிமைப்படுத்தும் நடவடிக்கைக்கு உள்ளாக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் வவுனியா பெரியகட்டில் அமைந்துள்ள குறித்த முகாமிற்கு கடற்படை உத்தியோகத்தர்கள் மற்றும் அவர்களது உறவினர்களென 111 பேர் பேருந்துகளின் மூலம் அழைத்துவரப்பட்டு தனிமைப்படுத்தும் நடவடிக்கைக்கு உள்ளாக்கப்பட்டிருந்தனர்.

தனிமைப்படுத்தப்பட்டவர்களிற்கான பி.சி.ஆர். பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டிருந்ததுடன் கொவிட்-19 தொற்று இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்ட 111பேர் இன்று தமது சொந்த இருப்பிடங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டமைக்கான சான்றிதழ்களும் இதன்போது வழங்கி வைக்கப்பட்டன.

திருகோணமலை, கண்டி, மாத்தளை, அநுராதபுரம், தம்புள்ளை, வவுனியா அலகல்லை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த கடற்படை வீரர்களின் குடும்ப உறுப்பினர்களே இதன்போது விடுவிக்கப்பட்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்