ராஜிதவின் முதலைக்கதையே வடக்கு வாக்கு வங்கியை எங்களுக்குச் சிதைத்தது! – இப்படி ராஜபக்ச அணி புலம்பல்…

“ஜனாதிபதித் தேர்தலின்போது கோட்டாய ராஜபக்சவுக்கு வாக்களிப்பதற்கு தயாராகவிருந்த வடக்கு, கிழக்கு மக்கள், ராஜித சேனாரத்னவின் முதலைக் கதையால் ஏற்பட்ட அச்சம் காரணமாகவே முடிவை மாற்றினர்.”

– இவ்வாறு அமைச்சரவை இணைப் பேச்சாளரும் அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு இன்று அரச தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. இதன்போது முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன கைதுசெய்யப்பட்டுள்ள விவகாரம் குறித்து எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“ஜனாதிபதித் தேர்தலக்கு முன்னர் எமது முன்னாள் நண்பர் ராஜித சேனாரத்ன ஊடகவியலாளர் மாநாடொன்றை நடத்தினார். தாடி, மீசைகள் எல்லாம் வைக்கப்பட்டு சாட்சிக்காக இருவர் வரழைக்கப்பட்டனர். ஜனாதிபதி கோட்டாபபய ராஜபக்ச மக்களைக் கொலைசெய்து, சடலத்தை முதலைக்குப் போடுவதைக் கண்டதாக அவர்கள் கூறினர்.

ஜனாதிபதிக்கு வாக்களிக்கவிருந்த மக்களைத் திசை திருப்புதற்காக முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கையே இது. குறிப்பாக அரச ஊடகங்களிலும் அடிக்கடி இந்தச் செய்தி வெளியிடப்பட்டது. இதனால் வடக்கு, கிழக்கு மக்கள் மத்தியில் அச்சமும், பீதியும் ஏற்பட்டது.

இப்படியான போலியான – சர்ச்சைக்குரிய அறிவிப்பாலேயே அவருக்கு எதிராக சட்டம் செயற்படுகின்றது. அதற்கு எம்மால் ஒன்றும் செய்ய முடியாது” – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.