கோட்டா அரசை தோற்கடிப்போம் – ராஜிதவின் மகன் சூளுரை
“2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8 ஆம் திகதி மஹிந்த அரசை தோற்கடித்தது போல அடுத்த சில மாதங்களில் கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசையும் வீழ்த்துவோம். அதற்கான நடவடிக்கை ஆரம்பமாகிவிட்டது.”
– இவ்வாறு ராஜித சேனாரத்னவின் மகனான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சதுர சேனாரத்ன சூளுரைத்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“ஐக்கிய தேசியக் கட்சி இரண்டுபட்டுவிட்டது, சஜித் அணியும், ரணில் தரப்பும் பிரிந்துவிட்டது என்று சந்தோசமடைந்த ராஜபக்ச தரப்புக்கு, தற்போது பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. ராஜித சேனாரத்ன கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவருக்கு நீதியைப் பெற்றுக் கொடுப்பதற்காக ஐக்கிய தேசியக் கட்சியும், ஐக்கிய மக்கள் சக்தியும் இணைந்து குரல் கொடுத்து வருகின்றன. ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்புமனுவை ஆட்சேபித்து வழக்குத் தாக்கல் செய்தவர் கூட ராஜிதவுக்கு நீதியைப் பெற்றுக் கொடுப்பதற்கு முன்னிலையாகியுள்ளார். எனவே, ராஜிதவை வைத்து முன்னெடுக்கவிருந்த அரசியல் ஆட்டத்தில் கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசு தோல்வி கண்டுள்ளது.
ராஜித சிறை வைக்கப்பட்டாலும், பிரிந்த ஜனநாயக அணிகள் நீதிக்காக ஒன்றிணைந்துள்ளன. சந்திரிகா, மஹிந்த ஆகியோரும் ராஜிதவை சிறையில் அடைப்பதற்கு முயற்சித்தனர். அது கைகூடவில்லை. சந்திரிகா, மஹிந்தவால் ஒன்றும் செய்யமுடியாமல் போனதை கோட்டாவுக்குச் செய்வதற்கு இடமளிக்கமாட்டோம்.
ஜனநாயகத்துக்கான எமது போராட்டம் தொடரும். அதற்கான அடித்தளம் ராஜிதவின் கைதுக்கு எதிரான நடவடிக்கையில் இருந்து ஆரம்பமாகிவிட்டது. இந்த ஆட்சியை தோற்கடிக்கும் வரை அது தொடரும். எம்மைக் கொலை செய்யலாம். ஆனால், தோற்கடிக்க முடியாது. எந்தவொரு சவாலையும் ஏற்போம்” – என்றார்.
கருத்துக்களேதுமில்லை