யாழ்.பல்கலையில் முள்ளிவாய்க்கால் நினைவுகூரல்: நிகழ்வு முடிந்தவுடன் விசாரணை நடத்திய பொலிஸார்

முள்ளிவாய்க்கால் நினைகூரல் வாரத்தை முன்னிட்டு, யாழ்.பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் பல்கலைகழக பிரதான வாயிலில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வு குறித்து நேற்று (வியாழக்கிழமை) மாலை 6 மணிமுதல் யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் உட்செல்லும் வாயில் முன்பாக கோப்பாய் மற்றும் யாழ்ப்பாண பொலிஸார் காத்திருந்தனர்.

எனினும், மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகள் திட்டமிட்டபடி இரவு-7 மணிக்கு பிரதான வாயில் முன்பாக சுடரேற்றி அஞ்சலி செலுத்தினர்.

மாணவர்கள் அஞ்சலி செலுத்தி முடியும் தருவாயில் பிரதான வாயிலில் நிகழ்வுகள் நடைபெறுவதனை அறிந்துகொண்ட பொலிஸார் அவ்விடத்திற்கு விரைந்து நிகழ்வினைத் தடுக்க முயன்றனர்.

அப்போது, மாணவ ஒன்றிய பிரதிநிதிகள் மூவர் தாம் நிகழ்வு முடிந்து திரும்புகிறோம் எனக்கூறி செல்ல முற்பட்டவேளை அவர்களை ஒளிப்படம் எடுத்த பொலிஸார் அவர்களின் அடையாள அட்டைகளை வாங்கி விபரங்களை குறிப்பெடுத்துக்கொண்டனர்.

அத்துடன், “இவ்வாறான நினைவஞ்சலி நிகழ்வுகளை நடத்துவது சட்டவிரோதமானது. மாணவர்களாக இருப்பதனால் உங்களை கைது செய்யவில்லை. இல்லையெனில் உங்களை கைதுசெய்து மூன்று மாதகாலம் வரையில் தடுத்து வைக்கக்கூடிய அதிகாரம் எமக்குண்டு” என பொலிஸார் கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.