அடுத்த ஐந்து ஆண்டுகளில் அரச அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களுக்கு எந்தவித வாகனங்களும் வழங்கப்படாது – அரசாங்கம்!

அடுத்த ஐந்து ஆண்டுகளில் அரச அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களுக்கு எந்தவித வாகனங்களும் வழங்கப்படாது என அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று(வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது கருத்து வெளியிட்ட அவர், “கொவிட் -19 கொரோனா வைரஸ் நிவாரண நிதியாக உலக நாடுகள் எமக்கு வழங்கிய தொகையில் இதுவரையில் ஒரு டொலரேனும் எமக்குக் கிடைக்கவில்லை. அதேபோல் பாதிக்கப்பட்ட மக்களுக்காக இரண்டு மாதங்களில் 80 பில்லியன் ரூபாய்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

மக்களின் வாழ்வாதார நிலைமைகளை கருத்தில் கொண்டே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் அரச ஊழியர்களின் கொடுப்பனவில் அறவிட அரசாங்கம் தீர்மானம் எடுத்துள்ளதாக பொய்யாக கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றது. யார் விரும்புகின்றார்களோ அவர்கள் சுயமாக உதவி செய்ய முடியும்.

அதேபோல் அரசாங்கத்தின் தேவைக்காக மூவாயிரம் வாகனங்களை கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்துகின்றனர்.

எனினும் அவ்வாறான எந்த நடவடிக்கையும் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படவில்லை. அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு இப்போது இருக்கும் வளங்களை பயன்படுத்தியே அரசாங்கம் இயங்க வேண்டும் என்ற கொள்கையில் ஜனாதிபதி உறுதியாக உள்ளார்.

இப்போதுள்ள நிலையில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் அரச அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களுக்கு எந்தவித வாகனங்களும் வழங்கப்படாது என நாம் நம்புகின்றோம்“ எனக் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.